×

ராஜ்நிவாசை இடமாற்றும் விவகாரம் மேரி கட்டிடத்தில் கவர்னர் செயலகம், நீதிபதிகள் கெஸ்ட் ஹவுசில் தங்கும் இடம்

*கவர்னர் தமிழிசை விருப்பம்

புதுச்சேரி : ராஜ்நிவாசை இடமாற்றும் விவகாரத்தில் புதிய திருப்பமாக மேரி கட்டிடத்தை கவர்னர் செயலகமாகவும், நீதிபதிகள் கெஸ்ட் ஹவுசில் தங்கும் இடமாகவும் மாற்றி கொள்ள கவர்னர் தமிழிசை விருப்பம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே ராஜ்நிவாஸ்(கவர்னர் மாளிகை) அமைந்துள்ளது. கடந்த 1733ம் ஆண்டு முதல் 1764ம் ஆண்டு வரை ஓட்டலாக இருந்து வந்தது. ஆங்கிலேயர் படையெடுப்பில் பீரங்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இந்த கட்டிடம் பெருத்த சேதமானது. பின்னர் 1761ல் மீண்டும் மறு கட்டுமானம் செய்யப்பட்டது. அன்று முதல் புதுச்சேரிக்கு சுதந்திரம் அடைந்த 1954ம் ஆண்டு வரை பிரெஞ்சு தலைமை கமிஷனர் அலுவலகமாக செயல்பட்டது.

சுதந்திரத்துக்கு பின்னர், 1963ம் ஆண்டு முதல் கவர்னர் மாளிகையாக மாற்றம் செய்யப்பட்டது. இங்கு ஆளுநர் தங்கும் அறைகள், அலுவலகம், ஆளுநர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவை செயல்பட்டு வருகிறது. 250 ஆண்டுகள் கம்பீரமாக இருந்த பழமையான ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் சேதம் அடைந்துள்ளது. வெவ்வேறு காலக்கட்டங்களில் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த கட்டிடங்கள், உறுதி தன்மை இழந்துள்ளது. இதையடுத்து ராஜ்நிவாஸ் புதுப்பிக்கும் பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கான பணிகளில் அரசு இறங்கியுள்ளது.

எனவே இதற்கு மேலும் காலதாமதப்படுத்த முடியாது என்பதால், இடத்தை காலி செய்ய கவர்னர் தமிழிசை ஏற்றுக்கொண்டார். முதலில் கடற்கரையோரம் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலாசார மையத்துக்கு மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் கட்டிடம் கடற்கரையிலேயே அமைந்துள்ளதால், பாதுகாப்பு காரணங்களை காட்டி இதனை ராஜ்நிவாஸ் மறுத்தது.
இதனை தொடர்ந்து புதிய கட்டிடத்தை தேர்வு செய்வதற்காக ஒரு கமிட்டி அமைக்க அரசு முடிவு செய்தது.

இது காலதாமதப்படுத்தும் செயல் எனக்கூறி பொதுப்பணித்துறை செயலர் மறுத்துவிட்டார். தொடர்ந்து இந்திராநகர் ஐஏஎஸ் குடியிருப்பில் கவர்னர் தங்குவதற்கான இடமாகவும், கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி கட்டிடத்தை கவர்னர் செயலகமாகவும் மாற்றிக்கொள்ளலாம் என கவர்னர் மாளிகை தரப்பில் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்திராநகர் குடியிருப்பும் பாதுகாப்பு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே ராஜ்நிவாசை இடமாற்றம் செய்ய கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி தனது முடிவை கோப்புகளில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தலைமை செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ராஜ்நிவாசை இடமாற்றம் செய்வதற்காக பல்வேறு அரசு கட்டிடங்களை பரிசீலனை செய்து கவர்னருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் கவர்னர் பாதுகாப்பு, வசதி குறைவு உள்ளிட்ட காரணங்களை கூறி ராஜ்நிவாஸ் ஏற்கவில்லை. இதனால் கட்டிடத் தேர்வு செய்யும் முடிவை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தனர்.

தற்போது கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் தங்கும் விருந்தினர் மாளிகையை கவர்னர் தங்கும் இடமாகவும், மேரி கட்டிடத்தை கவர்னர் செயலகமாகவும் செயல்பட விருப்பம் தெரிவித்து முதல்வருக்கு அனுப்பியுள்ள கோப்பில் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகள் குடியிருப்பை கேட்பதால், அமைச்சரவை முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல் இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சரவைதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

ஆய்வு, பரிந்துரைக்கு ₹22 லட்சம் செலவு

ராஜ் நிவாசின் முதல்தளத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகமானது. இதனை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், சேதமடைந்த பகுதிகளை பெயிண்டால் குறியிட்டு சென்றுள்ளனர். விரைவாக ராஜ்நிவாசை காலி செய்து கொடுத்தால்தான் பழமையான இந்த கட்டிடத்தை காப்பாற்ற முடியும் என ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தனர். தற்போதுள்ள கட்டிடத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம் சென்னை ஐஐடி மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டிருக்கிறது. ஆய்வுக்கான செலவுத் தொகை ரூ.22.23 லட்சமாகும்.

The post ராஜ்நிவாசை இடமாற்றும் விவகாரம் மேரி கட்டிடத்தில் கவர்னர் செயலகம், நீதிபதிகள் கெஸ்ட் ஹவுசில் தங்கும் இடம் appeared first on Dinakaran.

Tags : Governor's Secretariat ,Mary Building ,Governor ,Tamil Nadu ,Chant Puducherry ,Governor Tamil Nadu ,Guest House ,Puducherry ,Bharati Park Entre Rajnivas ,Mary Building Governor's Secretariat ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...