×

ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்-படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

ஏலகிரி : ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் திரண்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இம்மலையில் அரசு மற்றும் தனியார் என சுமார் பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இதில் படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, உள்ளிட்டவை அரசு சுற்றுலா தலங்களாக இயங்கி வருகிறது. இங்கு நபருக்கு ₹15 முதல் ₹50 வரை கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் ஏலகிரி மலைக்கு ஏராளமானோர் வந்து பொழுது போக்கி செல்கின்றனர். இம்மலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் உள்ளன. இருப்பினும் தொடர் விடுமுறை நாட்களில் தங்கும் விடுதிகளில் இடமின்றி சுற்றுலா பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், விடுமுறை தினம் என்பதால் படகு இல்லங்களில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டு படகு சவாரி செய்ய வரிசைகளில் நின்று குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நிலாவூர் பண்டேரா பார்க்கில் அரிய வகை வெளிநாடு பறவைகளுக்கு உணவு கொடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும், பறவைகளோடு விளையாடி செல்பி எடுத்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாண்டா செல்பி பார்க்கில் விதவிதமான உருவ பொம்மைகள் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து பொங்கல் விடுமுறை வருவதால் தொடர்ந்து தங்கும் விடுதிகள் ஒரு வாரங்களுக்கு முன்பிருந்தே ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் பொங்கல் விடுமுறையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்-படகு சவாரி செய்து மகிழ்ந்தனர் appeared first on Dinakaran.

Tags : Elagiri hill ,Elagiri ,Tirupattur district ,Tamil Nadu ,Elagiri mountain ,Dinakaran ,
× RELATED ஜோலார்பேட்டையில் பணிகள்...