×
Saravana Stores

விழாவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் “சேல்ஸ் ரொம்ப டல்’’ கரும்புபோல் தித்திக்குமா மண்பானை விற்பனை

*பொங்கல் விழாவை குதூகலமாக்க விதவிதமான வடிவில் தயாரிப்பு

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காட்டு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டும் அல்லாமல் வருடம் முழுவதும் இவர்கள் தயாரிக்கும் மண்பாண்டங்கள் ஆலங்காடு படித்துறை முதல் திருவள்ளுவர் சிலை வரை கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் விதவிதமாக தயார் செய்து விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர். இதனால் நெடுந்தூரத்தில் இருந்து வாகனங்களில் வரும் வெளியூர் மக்கள் இதனை பார்த்தவுடன் நிறுத்தி தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இப்பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் பாரம்பரியமாக, இத்தொழில்நுட்பம் தெரிந்து ஆர்வத்துடன் பிழைப்பு நடத்தி வந்தாலும் போதிய வருவாய் பார்க்க இரவு பகலாக உழைக்க வேண்டியுள்ளது. சமையலறையை எப்போது உலோக பாத்திரங்கள் ஆக்கிரமிக்க துவங்கியதோ அப்போதிலிருந்தே மண்பாண்ட தொழில் சரிய ஆரம்பித்துவிட்டது. ஆரோக்கியத்திற்கு கெடுதலென தெரிந்தும்கூட அலுமினிய பாத்திரங்களை யாரும் தவிர்ப்பதாயில்லை.

உடல்நலத்திற்கு பாதுகாப்பானது என்று உணர்ந்தும்கூட இந்த மண்பாண்டங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. ஆனால் கிராமங்களில் மட்டுமே மண்பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. தற்பொழுது மண்பானை உற்பத்தியாளர்கள் குறைவாக இருந்தலும், விற்பனையாளர்கள் அதிகரித்து விட்டனர். ஆங்காங்கே பல்வேறு தொழில் செய்பவர்கள் கூட இந்த மண் பாண்டங்களை வாங்கி விற்க துவங்கி விட்டனர்.

பொதுவாக பொங்கல் பண்டிகை என்றால் இந்த மண்பாண்டங்கள் மீது அனைத்து தரப்பு மக்களின் கண்ணும் படும். அதேபோல் அசைவ குழம்புகள் எதுவானாலும் மண்பானை சட்டியில் சமைத்தால் கிடைக்கும் ருசி தனியாகத்தான் இருக்கும். அதுவும் கருவாட்டு குழம்புக்கு சொல்லவே வேண்டாம். இதனால் அவசரத்திற்கு உலோக பாத்திரங்களை பயன்படுத்தினாலும் மண்பாண்டங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை இன்றும் பலர் கொடுத்து வருகின்றனர்.

தொழிலில் பல்வேறு சிரமங்கள் இருந்தும் முத்துப்பேட்டை பகுதி தொழிலாளர்கள் தளராத மனதுடன் பொங்கலை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி, சென்றாண்டுகளை போலவே விதவிதமான மண்பாண்டங்கள் சாலையோரத்தில் தயார் செய்து மக்கள் பார்வைக்கு அடுக்கி வைத்துள்ளனர். பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வியாபாரம் டல்லாகத்தான் உள்ளது.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி மேகநாதன் கூறுகையில்:

பொங்கலை எதிர்பார்த்து இரவு பகலாக கண்விழித்து தயார் செய்து, மண்பானை, சட்டி, மண் அடுப்புன்னு உற்பத்தி செய்து விதவிதமாக அடுக்கி வைத்துள்ளோம். இந்த மண்பாண்டங்கள் ரூ.100 முதல் 250 வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறோம். கடந்தாண்டு விற்பனையைவிட இந்தாண்டு ரொம்ப டல்லாக உள்ளது என்றார்.
தொழிலாளர் கோபால் கூறுகையில்:

ஆற்றில் போதுமான நீரோட்டமில்லை. அதனால் களிமண் எடுக்க முடியவில்லை. தரமான மண்ணும் கிடைக்கவில்லை. மேலும் உருப்படிகளை சுட்டுஎடுக்க மட்டை, வைக்கோல் விலையும் அதிகமாகிவிட்டது. இருந்தும் பொங்கலை எதிர்பார்த்து மண்பாண்ட தயாரிப்புகள் சன்னமாக ரெடியாகி வைத்துள்ளோம். இவைகளோடு மானாமதுரையிலிருந்தும் உருப்படிகளை வாங்கிவந்து விற்பனை செய்து வருகிறோம். இந்தாண்டு பொங்கல் வியாபாரம் நினைத்து பார்த்த அளவில் இல்லை என்றார்.

தொழிலாளர் மோகன் கூறுகையில்:நாங்கள் பல தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். பெரியளவில் வருமானம் இல்லை என்றாலும், குலத்தொழில் என்பதால் இதனை கைவிடாமல் செய்து வருகிறோம். தற்போது மக்கள் அலுமினியம் உட்பட உலோக பாத்திரங்களை நாடி சென்று பல்வேறு வியாதிகளில் சிக்கி, அவதியடைந்து மீண்டும் மண்பாண்ட பொருட்களின் பெருமையை அரிந்து இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பாரம்பரிய மண்பாண்ட பொருட்களை வாங்கி ஆரோக்யத்துடன் பொங்கலை கொண்டாட வேண்டும் என்றார்.

இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வௌ்ளம், வறட்சி, கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர்களால் பெரியளவில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் படிப்படியாக பழைய நிலைக்கு மாறி வந்தாலும், இந்தாண்டு போதிய மழை இல்லை, வெயிலுமில்லை. அதனால் உற்பத்தி குறைந்து இருந்தாலும் தளராமல் வழக்கம்போல் தொழிலாளர் நம்பிக்கையுடன் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இந்தாண்டு இந்த தொழிலாளர்களின் தொழில் கரும்புபோல் இனிக்கும் என எதிர்பாக்கப்படுகின்றன.

The post விழாவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் “சேல்ஸ் ரொம்ப டல்’’ கரும்புபோல் தித்திக்குமா மண்பானை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Pongal ,Muthupet ,Tiruvarur district ,Alangatu ,Pongal festival ,
× RELATED முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி விவசாயி படுகாயம்