×

விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் தமிழ் எழுத்துக்களில் ஊர்களின் பெயர்களை மாற்றிய அதிகாரிகள்

*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குழப்பம்

*பிழைகளை திருத்தம் செய்ய கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஊரின் பெயர்களில் தவறுதலாக எழுதியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்த எழுத்துக்கள் பிழையை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.ஒன்றிய அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளில் தொடர்ந்து ஹிந்தி மொழிகள் திணிக்கப்பட்டு வருவதாகவும், சொந்த மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரயில் நிலையங்களில் இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஒன்றிய அரசின் நகாய் நிறுவனம் சார்பில் புதிதாக போடப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் மாநில மொழிகளின் ஊர் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டும், தவறுதலாக எழுதப்பட்டும் வருகின்றன. அதன்படி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஊர் பெயர்கள் தமிழில் எழுதுவதில் புறக்கணிக்கப்படுவதாகவும், பல்வேறு ஊர்களின் பெயர்கள் திட்டமிட்டு தவறுதலாக எழுதப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தென் மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்களில் புதுச்சேரி உள்ளிட்ட துறைமுக நகரங்களோடு இணைக்கப்படும் விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் ஊர் பெயர்கள் தமிழில் தவறுதலாகவும், திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற, சுமார் ரூ.6,431 கோடி திட்ட மதிப்பீட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியிலிருந்து தொடங்குகிறது.

இந்த திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது.இந்நிலையில் சாலை பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிந்த நிலையில் வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. விரைவில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த சாலையை பிரதமர், பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இதனிடையே விழுப்புரத்தில் இருந்து துவங்கும் சாலைகளில் கிராமங்களுக்கு செல்லும் ஊர்களின் பெயர்கள் ஹிந்தி, ஆங்கிலம், உள்ளூர் முறையான தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதனிடையே தமிழில் எழுதப்பட்டுள்ள ஊர் பெயர்கள் அச்சுப்பிழை ஏற்பட்டும், தவறுதலாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக ஜானகிபுரத்தில் இருந்து தொடங்கும் சாலையில் கொளத்தூர் என்பதற்கு பதிலாக குளத்தூர் என்றும், திருப்பாச்சனூர் என்பதற்கு பதிலாக திருப்பச்சநூர் என்றும் பல்வேறு ஊர்களின் பெயர்கள் தமிழ் எழுத்து பிழைகளோடு எழுதப்பட்டுள்ளது. இதுபோல் நாகப்பட்டினம் வரை சொல்லும் இந்த ஊர் பெயர்களும் பிழை திருத்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஊர்களுக்கு செல்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழிக்கும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை உள்ளதாக சமூக ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதனை உடனடியாக திருத்தம் செய்து வாகன ஓட்டிகள், பொதுமக்களின் குழப்பத்தை தீர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் தமிழ் எழுத்துக்களில் ஊர்களின் பெயர்களை மாற்றிய அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Villupuram-Nagai National Highway ,Villupuram-Nagapatnam National Highway ,United Govt ,
× RELATED வங்கி, எல்ஐசி தலைவர்களின் ஓய்வு வயது அதிகரிப்பா?..ஒன்றிய அரசு புதிய முடிவு