×

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறந்தால் சுமார் 10,000 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.. உச்சநீதிமன்றத்தில் முறையீடு

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தமிழகத்தின் துாத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை, 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.இந்நிலையில் ஆலை அமைந்துள்ள பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை உத்தரவை நீக்கி, மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி ஆலையின் ஆதரவாளர்கள் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடையீட்டு மனுவையும் மேல்முறையீட்டு மனுவுடன் சேர்த்து அவசரமாக விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு முறையீடு செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் சுமார் 10,000 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்றும் வழக்கறிஞர் விகாஸ் சிங் முறையிட்டார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி,”ஏற்கனவே இந்த வழக்கு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளோம் . இருப்பினும் இந்த வழக்கை ஜனவரியிலேயே விசாரிக்க முடியுமா என்பதை ஆராய்ந்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது இடையீட்டு மனுவும் விசாரிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறந்தால் சுமார் 10,000 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.. உச்சநீதிமன்றத்தில் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Supreme Court ,Chennai ,Thoothukudi ,Vedanta Company ,Thutukudi, Tamil Nadu ,Sterlite ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...