×

தனிப்படை போலீசார் அதிரடி நெல்லையில் 26 கிலோ கஞ்சாவுடன் 7 பேர் கைது

*சொகுசு கார், பைக் பறிமுதல்

பேட்டை : நெல்லை அருகே பேட்டையில் கஞ்சா கடத்திய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.நெல்லை போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி, மேற்கு இணை கமிஷனர் சரவணகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி நெல்லையை அடுத்த பழையபேட்டை கண்டியபேரி அருகே சந்தேகப்படும்படி பைக்கில் நின்று கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ராமையன்பட்டி சிவாஜிநகரைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் அருணாச்சலம் (28), முன்னீர்பள்ளம் அருகே தருவை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கதிரேசன் (20) என்பதும், அவர்களது பைக்கில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் இதில் தொடர்புடைய மேலும் சிலரை டவுன் உதவி கமிஷனர் சுப்பையா தலைமையில் தனிப்படை எஸ்ஐ அருணாச்சலம், எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டி, ஏட்டு சேகர் ஆனந்த் விபின் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு நெல்லை அருகே மாறாந்தை, சீதபற்பநல்லூர், பழையபேட்டை, கண்டியப்பேரி பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு சொகுசு காரை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த 5 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 25 கிலோ கஞ்சா இரண்டு சாக்கு பையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மாறாந்தை வடக்கு காலனி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பேச்சிமுத்து (27), ராமையன்பட்டி அக்ரகார தெரு கொம்பையா மகன் மதன் செல்வம் (22), சத்திரம்புதுக்குளம் துரை மகன் முருகன் (20), சண்முகம் மகன் குமார் (21), தச்சநல்லூர் இசக்கி மகன் இசக்கிராஜா (23) ஆகிய 5 பேர் மீது பேட்டை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து கைது செய்தார்.

2 நாள் அதிரடி வேட்டையில் கஞ்சா கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

The post தனிப்படை போலீசார் அதிரடி நெல்லையில் 26 கிலோ கஞ்சாவுடன் 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nella ,Petti ,Nellai ,Nellai Police ,Commissioner ,Dinakaran ,
× RELATED நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர்...