டெல்லி :பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது, கர்ப்பிணியான பில்கிஸ் பானு 11 பேர் கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த கும்பல் 14 பேரை எரித்து கொன்றது. இந்த வழக்கில் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு கருணை அடிப்படையில் கடந்தாண்டு விடுவித்தது. இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். மேலும் பல்வேறு மனுக்களும் இந்த மனுவை கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகிய நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது.
கே.எம்.ஜோசப் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாகரத்னாவுடன் இணைந்து, உஜ்ஜல் புயான், வழக்கை விசாரித்து வந்தார். வழக்கு விசாரணையின் போது, 11 பேரும் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என்று குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. கடைசியாக நடைபெற்ற விசாரணையின்போது, விதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பு வாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்ததை எதிர்த்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததுதான்.பில்கிஸ் பானு வழக்கு மராட்டியத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவும் குற்றவாளிகளுக்கு நிவாரணங்களை வழங்கவும் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை.பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையை காப்பது மிகவும் முக்கியமானது. பெண்களின் மரியாதை மிகவும் முக்கியம்; பெண்கள் மரியாதைக்குரியவர்கள்:எனவே பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை அரசு முன் விடுதலை செய்தது செல்லாது என தீர்ப்பு வழங்குகிறோம்.. பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும், “இவ்வாறு தெரிவித்தனர்.
The post அதிர வைத்த பில்கீஸ் பானு வழக்கு : 11 குற்றவாளிகளை முன்விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவு ரத்து : உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.