×

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்களாக பரவலாக மழை: ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 11,000 கனஅடி நீர் திறப்பு!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி தடுப்பணையில் இருந்து 11,000 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 18ம் தேதி பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேறியது. இதனால் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள், வியாபார தளங்கள், விலை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 2 வரமாக மழை இல்லாத காரணத்தால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து இருந்தது.

மேலும், இரு தினங்களாக தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 11,000 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல்வாரி மதகுகளை நீர்வளத்துறையினர் திறந்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் கடையோர பகுதிகளின் வெள்ள அபாயம் குறித்து கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்களாக பரவலாக மழை: ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 11,000 கனஅடி நீர் திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tenkasi ,Srivaikundam barrage ,Thoothukudi ,Srivaikundam Thamirapharani barrage ,Tamiraparani ,Dinakaran ,
× RELATED நெல்லை, தென்காசியில் வெயிலுக்கு 2 பேர் பலி