×

சென்னை புறநகர் பகுதிகளில் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 25 கன அடி உபரி நீர் திறப்பு

 

பல்லாவரம், ஜன.8: சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. மேலும், இரு தினங்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகு வழியாக நேற்று 25 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று மாலை நிலவரப்படி நீர்மட்ட உயரம் 21.93 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3102 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து மணிக்கு 36 கன அடியாகவும் உள்ளது.

மேலும், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரம் 22 அடியை நெருங்குகிறது. கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பிய நிலையில், தற்போதும் பரவலாக மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயரக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மழையின் அளவு அதிகரித்தாலும், நீர்வரத்து அதிகரித்தாலும், உபரி திறப்பது படிப்படியாக அதிகரிக்கக்கூடும் எனவும், ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்கவும், எதிர்பார்த்த படி மழை இல்லையென்றால் உபரி நீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்படும் என்று ஏரியை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இரண்டரை மாதங்களாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை குறைந்ததன் காரணமாக ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 3,064 மி்ல்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தற்போது 35 அடி உயரத்தில் நீர்மட்டம் 34.75 அடியாக உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 40 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

மழை காரணமாக மேலும் நீர் இருப்பு உயரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் நீர்வளத்துறை அதிகாரிகள் 12வது மதகு வழியாக வினாடிக்கு 50 கன அடி வீதம் உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் மழை பெய்யும்போது மேலும் நீர் இருப்பு கூடினால் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை புறநகர் பகுதிகளில் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 25 கன அடி உபரி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Semperambakkam Lake ,Chennai ,Ballavaram ,Chennai Meteorological Centre ,Kanchipuram ,Thiruvallur ,
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...