×

தாமரைப்பாக்கத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் பணி: கூடுதல் கலெக்டர் ஆய்வு

 

திருவள்ளூர், ஜன. 8: தாமரைப்பாக்கத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் பணிகளை கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநிலம் சித்தூர் முதல் தச்சூர் வரை 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டிலிருந்து ஊத்துக்கோட்டை வரை உள்ள 350 விவசாயிகளிடமிருந்து 1,300 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது.

ஊத்துக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தாமரைப்பாக்கத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த நரிக்குறவர்கள் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் 23 வீடுகள் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக பாதிக்கப்படுகின்றன. இதனால் 23 வீடுகள் அமைந்துள்ள இடம் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 23 நரிக்குறவர் இன குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல் ஆகியோர் தாமரைப்பாக்கம் பகுதியில் நரிக்குறவர் இன குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது 23 நரிக்குறவர் இன குடும்பங்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post தாமரைப்பாக்கத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் பணி: கூடுதல் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thamaripakkam ,Tiruvallur ,Thiruvallur district, Andhra ,Chittoor ,Thachur ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...