×

செயல்படாத 29,273 நிறுவனங்கள் பெயரில் போலி ரசீதுகளை சமர்ப்பித்து ரூ.44,000 கோடி ஜிஎஸ்டி மோசடி: அதிகாரிகள் பகீர் தகவல்

புதுடெல்லி: செயல்படாத 29,273 நிறுவனங்கள் பெயரில் போலி ரசீதுகளை சமர்ப்பித்து, ஜிஎஸ்டி வரிப்பலனாக ரூ.44,000 கோடி வரிப் பலன் பெற்று மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் அதிக நிறுவனங்கள் மோசடி செய்ததில் மகாராஷ்டிராவுக்கு முதலிடம் உள்ளதாக அவர்கள் கூறினர். ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து, இன்புட் வரி கிரெடிட் (உள்ளீட்டு வரி வரவு) மூலம் நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான ரசீதுகளை சமர்ப்பித்து இன்புட் வரியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு பொருள் அல்லது சேவைக்கு ஒரு முறை மட்டுமே வரி செலுத்துவதை இது உறுதி செய்கிறது. ஆனால், பொருட்களை சப்ளை செய்ததாக போலி ரசீதுகளை சமர்ப்பித்து இன்புட் வரியைப் பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த டிசம்பர் வரையிலான 8 மாதங்களில், செயல்படாத 29,273 போலி நிறுவனங்கள் மூலம் பொய்யான ரசீதுகளைச் சமர்ப்பித்து மொத்தம் ரூ.44,015 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது என ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜிஎஸ்டி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போலியாக நிறுவனங்களை பதிவு செய்து ஜிஎஸ்டி இன்புட் வரி கிரெடிட் பெற்று மோசடி செய்யும் நிறுவனங்களைக் கண்டறிய கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் செயல்படாத 29,273 போலி நிறுவனங்கள் மூலம் பொய்யான ரசீதுகளைச் சமர்ப்பித்து மொத்தம் ரூ.44,015 கோடி இன்புட் வரி கிரெடிட் பலனை பெற்று மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் மட்டும் 4,153 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.12,036 கோடி மோசடி நடந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 926 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. இதற்கு அடுத்ததாக ராஜஸ்தான் (507), டெல்லி (483), அரியானா (424) உள்ளன. போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் கடந்த காலாண்டில் ரூ.4,646 கோடி அரசுக்கு சேமிப்பாகியுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.1,317 கோடி தடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் 926 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.2,201 கோடி மோசடி நடந்துள்ளது. 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல், டெல்லியில் 483 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.3,028 கோடி மோசடி நடந்துள்ளது; 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களை பொறுத்தவரை ஆந்திராவில் 19 நிறுவனங்கள் மூலம் ரூ.765 கோடி, அரியானாவில் 424 நிறுவனங்கள் மூலம் ரூ.624 கோடி, உத்தர பிரதேசத்தில் 443 நிறுவனங்கள் மூலம் ரூ.1,645 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post செயல்படாத 29,273 நிறுவனங்கள் பெயரில் போலி ரசீதுகளை சமர்ப்பித்து ரூ.44,000 கோடி ஜிஎஸ்டி மோசடி: அதிகாரிகள் பகீர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Inactive ,Bakir ,NEW DELHI ,Maharashtra ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...