×

2030க்குள் 1 டிரில்லியன் டாலர் இலக்கு முதல்வரின் முயற்சிக்கு பாராட்டு: மாநாட்டில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: தமிழ்நாடு ஒரு மாநிலமாக வளமான வரலாறையும், வளர்ச்சி மிகுந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு வரும் 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்து இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். அரசாங்கமும், தொழில் முனைவோர்களும், மக்களும் சேர்ந்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் மேலும் உயர்த்துவார்கள் என நம்புகிறேன்.

ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதை நாடே கொண்டாடி வருகிறது. இந்த திட்டத்தின் இயக்குநர் தமிழ்நாட்டின் மகள் என்பதை நினைக்கும் போது பெருமிதம் கொள்கிறேன். சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு இந்தியா விஞ்ஞான வளர்ச்சியில் வேகமெடுத்து வருகிறது. இந்தியா வரும் 2047க்குள் வல்லரசு நாடாக வளர்ந்து நிற்க வேண்டுமானால், இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு பகுதியும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம். இதையொட்டி பிரதமர் மோடி, தான் பதவி ஏற்கும் போது, இந்தியா வளர ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும் என்று விரும்பினார்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை நிர்ணயித்து பயணித்து கொண்டிருப்பது இந்தியாவுக்குள் மட்டுமின்றி தமிழ்நாட்டிற்குள்ளும் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர வழிவகுக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும். இதன்மூலம் இளைஞர்கள் தங்களுக்கான பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய முயற்சிப்பார்கள். இதனால் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறும். இதற்கு வித்திட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஒன்றிய, மாநில அரசுகள் இதுபோல் ஒருங்கிணைத்து செயல்படும்போது நாட்டின் பொருளாதாரம் வளரும். இதை ஒட்டியே பிரதமர் மோடி ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை தமிழ்நாட்டில் சமீபத்தில் தொடங்கி வைத்தார். பிரதமரின் மனதில் தமிழ்நாட்டிற்கு தனி இடம் உண்டு. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் பெருவளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த 2 காலாண்டு பகுதிகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்கள் வேலைக்கு வரும் போது, வீட்டு வேலைகளை செய்ய தொழில்நுட்பங்களை மாற்றி அமைப்பார்கள்.

இதனால் வருங்காலத்தில் உலகளவில் துணி துவைக்கும் இயந்திரம், டிஸ் வாசர்ஸ் போன்றவைகளுக்கு முதன்மை சந்தையாக இந்தியா விளங்கும். அடுத்த 30 ஆண்டுகளில் இளைய தலைமுறையினரை கொண்டு இந்தியா 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா உலகளவில் வர்த்தகம் செய்வதற்கு சிறந்த இடமாக மாறும். தமிழ்நாடும் வர்த்தகத்துக்கு ஏற்ற இடமாக சிறந்து விளங்கும். கடந்த 10 ஆண்டுகளில் முதலீடு செய்வதற்காக தகுதியான இடமாக இந்தியா மாறியிருக்கிறது. இந்த மாநாடு மாபெரும் வெற்றியடை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் இலக்கு முதல்வரின் முயற்சிக்கு பாராட்டு: மாநாட்டில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Piyush Goyal ,Chennai ,World Investors Conference ,Union Trade and ,Industry Minister ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...