×

17வது இரட்டை சதம் புஜாரா அமர்க்களம்

ராஜ்கோட்: ஜார்க்கண்ட் அணியுடனான ரஞ்சி கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய செதேஷ்வர் புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் தனது 17வது இரட்டை சதத்தை விளாசி அசத்தினார். சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீசியது. ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 142 ரன்னுக்கு சுருண்ட நிலையில், சவுராஷ்டிரா 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 406 ரன் எடுத்திருந்தது.

புஜாரா 157 ரன், பிரேரக் மன்கட் 23 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். புஜாரா இரட்டை சதம் விளாச, பிரேரக் மன்கட் சதம் அடித்தார். சவுராஷ்டிரா 4 விக்கெட் இழப்புக்கு 578 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. புஜாரா 243 ரன் (356 பந்து, 30 பவுண்டரி), பிரேரக் 104 ரன்னுடன் (176 பந்து, 12 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் தர கிரிக்கெட்டில் புஜாரா விளாசிய 17வது இரட்டை சதமாக இது அமைந்தது.

கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனை மைல்கல்லை எட்டிய 6வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக பிராட்மேன் (37 இரட்டை சதம்), ஹம்மாண்ட் (36), ஹெண்ட்ரன் (22), சட்கிளிப் (17), ராம்பிரகாஷ் (17) ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 436 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜார்க்கண்ட் 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

The post 17வது இரட்டை சதம் புஜாரா அமர்க்களம் appeared first on Dinakaran.

Tags : Pujara Amarkalam ,Rajkot ,Saurashtra ,Chedeshwar Pujara ,Ranji Trophy A Division league ,Jharkhand ,Saurashtra Cricket Association Stadium ,Dinakaran ,
× RELATED ராஜ்கோட் விமான நிலையத்தில் பயணிகளை...