×

இந்தாண்டு ரோபோட் அனுப்பப்படும் 2025ல் விண்வெளியில் இந்தியர்கள் பறப்பார்கள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

சென்னை: இந்தியர்கள் 2025ல் விண்வெளியில் பறப்பார்கள் என்று உலக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துகொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: சந்திரயான் 2 தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து கண்டறிந்தோம். தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொண்டோம். தொழில்நுட்ப ரீதியில் சந்திரயான் வடிவமைப்பில் மாற்றம் கொண்டுவந்தோம். கடைசி 2 ஆண்டுகளாகத்தான் நான் தலைவராக இருந்தேன். அதற்கு முன்பு சிவன் தலைமையில் குழுவினர் சிறப்பாக பணியாற்றினார்கள். மென்பொருள், வன்பொருள் மாற்றங்கள் 6 மாதமாக சந்திரயான் விண்கலத்தில் மேற்கொண்டோம். இந்தியாவில்தான் குறைவான விலையில் ராக்கெட் அனுப்புகிறோம்.

இது நமது கலாசார ரீதியில் தொடர்புடையது. வன்பொருள் பயன்பாட்டை குறைப்பதுதான் நமது வெற்றிக்கு காரணம். ராக்கெட் கட்டுமானம் பெரிய அளவில் லாபம் தராது. விண்வெளி துறையில் முதலீடு செய்தால் அதை திரும்ப எடுப்பதற்கு நிறைய காலம் எடுக்கிறது என்கிற மனநிலை உள்ளது. ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது. 60 முதல் 70 சதவீத பணம் செயற்கைகோளை கட்டுப்படுத்தும் மையம் அமைப்பதற்கு போதுமானதாக இருக்கிறது. சந்திரயான் 3 திட்டம் மக்களின் இதயங்களில் உள்ளது. இந்தியர்களின் உழைப்போடு விண்வெளி துறையில் சாதிக்க முடியும் என்கிற சூழலை உருவாக்கியது. மக்களிடம் உணர்ச்சிகர உணர்வை உருவாக்கியது.
பிரதமர் மோடி கூறியது போல் சந்திரயான் வெற்றி அனைவருக்குமானது. ககன்யான் திட்டம் இந்த ஆண்டே முடிக்க வேண்டியது. கொரோனா போன்ற தொற்று காரணங்களால் செய்ய முடியவில்லை. மனிதர்கள் இல்லாமல் ரோபோட் அனுப்பும் பணி மேற்கொள்ளப்படும்.

2025-ம் ஆண்டு விண்வெளியில் இந்தியர்கள் பறப்பார்கள். விண்வெளி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தனியார் விண்வெளி துறையில் முதலீடு செய்வதற்கான சூழலை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு வியாமதிரா என்னும் ரோபோட்டை விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். இவ்வாறு கூறினார்.

The post இந்தாண்டு ரோபோட் அனுப்பப்படும் 2025ல் விண்வெளியில் இந்தியர்கள் பறப்பார்கள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி appeared first on Dinakaran.

Tags : ISRO ,Somnath ,Chennai ,Chandrayaan ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...