×

கும்கி யானை மூலம் மயக்க ஊசி செலுத்தி 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிக்கப்பட்டது: விடியவிடிய மறியல் போராட்டத்தால் பரபரப்பு

பந்தலூர்: பந்தலூர் பகுதியில் 2 பேரை கொன்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பகுதியில் கடந்த 5 நாட்களில் சிறுத்தை தாக்கியதில் பழங்குடியின இளம்பெண் மற்றும் ஜார்க்கண்ட் மாநில தம்பதியின் 3 வயது குழந்தை பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பந்தலூர் பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

அதேபோல் பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட எருமாடு, சேரம்பாடி, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, உப்பட்டி, தேவாலா, உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 3 மணி வரை மறியல் போராட்டம் தொடர்ந்தது. தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேங்கொரேஞ் முனீஸ்வரன் கோவில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு பெண் போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலை 8 மணி முதல் மீண்டும் மேங்கொரேஞ் முனீஸ்வரன் கோவில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். உப்பட்டி, தேவாலா பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நீடித்தது. கூடலூர், பந்தலூர் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 90 சதவீத தனியார் ஆட்டோ, ஜீப், டாக்சி, லாரி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. தகவலறிந்து வந்த எஸ்பி சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவித்தார். இருப்பினும் போராட்டம் தொடர்ந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் 6 இடங்களில் கூண்டு வைத்தும் 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தும் கண்காணிக்கப்பட்டது. 80க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கும்கி யானை உதவியுடன் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 2 மணி அளவில் ஏலமன்னா பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பக வன உயிரின கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் கும்கி யானையில் இருந்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினார். சிறிது தூரம் ஓடிய சிறுத்தை புதரில் விழுந்தது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை மீட்க முயன்றனர். அப்போது வன ஊழியர் ஒருவரின் முகத்தில் சிறுத்தை காயம் ஏற்படுத்தியது. தொடர்ந்து வனத்துறையினர் வலையை போட்டு சிறுத்தையை மடக்கிப்பிடித்து கூண்டில் ஏற்றி வாகனத்தில் கொண்டு சென்றனர்.

பிடிக்கப்பட்ட சிறுத்தையை தங்களிடம் காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். அவர்களிடம் கலெக்டர் அருணா, எஸ்பி சுந்தரவடிவேல் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் தங்களுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்கவேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது 29) என்பவர் கடந்த மாதம் 29ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி (வயது 3½) என்பவர் கடந்த 6ம் தேதி அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா ரூ.10 லட்சம் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கும்கி யானை மூலம் மயக்க ஊசி செலுத்தி 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிக்கப்பட்டது: விடியவிடிய மறியல் போராட்டத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Jharkhand ,Nilgiris ,Dinakaran ,
× RELATED வெயில் ருத்ர தாண்டவம்: நீர் நிலைகளை தேடி அலையும் யானைகள் கூட்டம்