×

பருவநிலை மாறுபாடுகளுக்கு மரம்சார்ந்த விவசாயத்தின் மூலம் தீர்வு காண முடியும்: காவேரி கூக்குரல் இயக்க களப் பயிற்சியில் தகவல்

கோவை: “பெரு வெள்ளம், அதீத வறட்சி போன்ற பருவநிலை மாறுபாடுகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தீர்வு காண முடியும்” என காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறினார். இவ்வியக்கம் சார்பில் இன்று (ஜன 7) ஒரே நாளில் 6 இடங்களில் ‘லட்சங்களை கொட்டித் தரும் மரப் பயிர் சாகுபடி’ என்ற பெயரில் மண்டல வாரியான களப் பயிற்சி நடைபெற்றது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெற்ற இப்பயிற்சியில் 1,200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு முன்னோடி மரப் பயிர் விவசாயிகளும், வேளாண் வல்லுநர்களும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக, மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்து அதை நடும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள் பண்ணை முழுவதையும் நேரில் பார்வையிட்டு தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை முன்னோடி விவசாயிகளிடமே கேட்டு தெளிவு பெற்றனர்.

இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறுகையில்:
“விவசாயிகளின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் மரம்சார்ந்த விவசாயம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. பெரு வெள்ளம், அதீத வறட்சி போன்ற பருவநிலை மாறுபாடுகளுக்கு விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் தீர்வு காண முடியும். பூமியில் மழை நீரை சேமிக்க, மேல் மண் வளம் கெடாமல் இருக்க, மண்ணின் அங்கக கனிமத்தை அதிகரிக்க, சத்தான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய மரம்சார்ந்த விவசாயம் உதவியாக இருக்கும்.

எனவே, காவேரி கூக்குரல் இயக்கமானது தமிழக விவசாயிகளிடம் மரம்சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன்காரணமாக, இன்று ஒரே நாளில் கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மண்டல வாரியான களப் பயிற்சிகளை நடத்தி உள்ளோம். அந்தந்த பகுதி விவசாயிகள் அவர்களுடைய பகுதியில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப எந்த மாதிரியான மரங்கள் வளரும் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்ள இப்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும்” என்றார்.

The post பருவநிலை மாறுபாடுகளுக்கு மரம்சார்ந்த விவசாயத்தின் மூலம் தீர்வு காண முடியும்: காவேரி கூக்குரல் இயக்க களப் பயிற்சியில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Cauvery River Initiative ,Coimbatore ,Tamil Maran ,Tamil Nadu ,Cauvery Crying Movement ,Dinakaran ,
× RELATED கேட்டட்’ குடியிருப்புவாசிகள் தங்களது...