×

ஒவ்வொரு நாட்டுக்கும் பும்ரா போல் ஒரு பவுலர் கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவே கிடையாது: இர்பான் பதான் புகழாரம்

மும்பை: தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேப் டவுன் மைதானத்தில் இந்திய அணி முதல்முறையாக வெற்றிபெற்று வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு வேகப்பந்துவீச்சாளரான சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா முக்கிய காரணமாக அமைந்தனர். அனுபவ வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக விலகியதால், இவர்கள் இருவரின் மீதும் அதிக சுமை இருந்தது. ஏனென்றால் 10 மாதங்கள் ஓய்வுக்கு பின் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா, முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் பும்ரா திரும்பியதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் பும்ரா மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். அதுமட்டுமல்லாமல் தென்ஆப்பிரிக்கா மண்ணில் 3வது முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில், “காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் அதிக பணம் கிடைக்கும் டி20 கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் பும்ரா.

இதற்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பெரிய தூதுவர் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு நாட்டுக்கும் பும்ராவை போல் ஒரு பவுலர் கிடைத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவே கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் உடல்மொழிக்கு நான் ரசிகனாகவே மாறிவிட்டேன். அதிலும் காயத்திற்கு பின் விளையாடும் முதல் டெஸ்ட் தொடரிலேயே தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். என்னை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டுக்கு பும்ராவின் செயல்பாடுகள் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது’’ என்றார்.

The post ஒவ்வொரு நாட்டுக்கும் பும்ரா போல் ஒரு பவுலர் கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவே கிடையாது: இர்பான் பதான் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Bumrah ,Irfan Badan ,Mumbai ,South Africa ,Cape Town Stadium ,Siraj ,Jasprit Bumrah ,Mohammed Shami ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!