×

மாணவி பலாத்கார வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியர் செல்போனில் இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள்: ஆசிரியைகளுக்கும் வலைவிரித்தது அம்பலம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கைதான உடற்கல்வி ஆசிரியர் செல்போனில் இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளன. வீடியோ காலில் உரையாடும் போது அதை பதிவு செய்து வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங் (32). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர், கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கன்னியாகுமரி அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவிக்கு, ஆசை வார்த்தைகள் கூறி சுந்தர்சிங் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ், சுந்தர்சிங்கை கைது செய்தனர். கைதான சுந்தர்சிங், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுந்தர்சிங்கின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வீடியோ காலில் உரையாடும் சுந்தர்சிங், அதை அந்த இளம்பெண்களுக்கே தெரியாமல் ரகசியமாக பதிவு செய்துள்ளார். இளம்பெண்கள் சிலர் சுந்தர்சிங்கின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, அவர் கூறியபடி ஆடைகளை விலக்கி காட்ட, அதையும் ரகசியமாக வீடியோ பதிவு செய்திருக்கிறார். இது போன்ற வீடியோக்கள் செல்போனில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடற்கல்வி ஆய்வாளர் என்பதால், பல மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டதுடன், அல்லாமல் அவர்களின் தாயாருடனும் சுந்தர்சிங்கிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கணவர் வெளிநாட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை தனது வலையில் வீழ்த்துவதற்கான வேலைகளில் சுந்தர்சிங் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே சுந்தர்சிங், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கால்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட இருந்தார். அப்போதே இவரது லீலைகள் குறித்து எழுந்த புகார்களின் அடிப்படையில், நியமனம் ரத்தானது. பல்வேறு தனியார் பள்ளிகளில் பணியாற்றிய சுந்தர்சிங், அங்குள்ள பல ஆசிரியைகளுக்கும் வலை விரித்துள்ளார். கல்லூரிகளுக்கு சிறப்பு பயிற்சியாளராக செல்லும் போது பேராசிரியைகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு அவர்களுடன் செல்போன்களில் உரையாடல், வீடியோ கால் உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது இவரது செல்போனை கைப்பற்றி உள்ள போலீசார், அதை சைபர்கிரைம் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். மேலும் வீடியோக்களில் உள்ள பெண்களிடம் இருந்து புகார்களை வாங்கவும் முடிவு செய்துள்ளனர்.

குட்டி காசி
நாகர்கோவில் கோட்டார் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்பவர், மாணவிகள், இளம்பெண்களை சீரழித்து அவர்களை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவத்தில் தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் இளம்பெண்கள், மாணவிகளுடனான சுந்தர்சிங்கின் வீடியோக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

The post மாணவி பலாத்கார வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியர் செல்போனில் இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள்: ஆசிரியைகளுக்கும் வலைவிரித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kanyakumari ,Sundarsingh ,Vattavila ,Kottar ,
× RELATED கன்னியாகுமரி – நாகர்கோவில் சாலையில்...