×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தொடர்ந்து விரைவில் புதுப்பொலிவு பெறும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம்: ₹20 கோடியில் பணிகள் தீவிரம்

கூடுவாஞ்சேரி, ஜன.7: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தொடர்ந்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் விரைவில் புதுப்பொலிவுடன் ஜொலிக்க போகிறது. இதில், ₹20 கோடி மதிப்பீட்டில் பார்க்கிங் வசதி உட்பட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் ₹394 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன பேருந்து நிலையத்தை கடந்த 30ம்தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அது தற்போது சுற்றுலா தளம் போன்றும், சென்னை விமான நிலையம் போன்றும் ஜொலித்து வருவதால் பொதுமக்கள் திரண்டு சென்று பார்த்து ரசித்துவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் தொடர்ந்து பழமைவாய்ந்த கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் தளம் அமைத்தல், பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில், தார்சாலை அமைத்தல், 2 நுழைவு வாயில் அமைத்தல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 அறை கொண்ட நவீன இலவச கழிப்பறை வசதி, சிஆர்பிஎப் ரயில்வே போலீசாருக்கு இருப்பிடம், ரயில் நிலையம் புதுப்பித்தல், சுற்றுச்சூழல் புதுப்பித்தல் மற்றும் ரயில் நிலையத்தை சுற்றி சிசிடிவி கேமராக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம் சாலை, ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் சாலை, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் அன்றாடம் வேலைக்கு சென்று வருவோர் என கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்திலும், ரயில் நிலையத்திலும் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு அன்றாடம் சென்றுவர வேண்டும்.

இதில், ரயில் நிலையம் மற்றும் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்றால் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. தற்போது பைக், ஆட்டோ மற்றும் கார் பார்க்கிங் வசதியும், ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், நாளுக்குநாள் அதிகரித்து வந்த குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்துவிடும் என்று நம்புகிறோம். மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தொடர்ந்து கூடுவாஞ்சேரியில் உள்ள பழமை வாய்ந்த ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், விரைவில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையமும் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் என்றனர். 2 நுழைவு வாயில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 அறை கொண்ட நவீன இலவச கழிப்பறை , சிஆர்பிஎப் ரயில்வே போலீசாருக்கு இருப்பிடம் அமைகிறது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தொடர்ந்து விரைவில் புதுப்பொலிவு பெறும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம்: ₹20 கோடியில் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kuduvanchery railway station ,Klambakkam ,Kuduvanchery ,railway ,station ,Klambakkum bus station ,Chennai, Vandalur ,Klampakkam GST… ,Klampakkam Bus ,Dinakaran ,
× RELATED மண்ணிவாக்கம் கல்லூரியில் ‘என்...