×

முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு கருத்து அதிமுக செயலாளர் அதிரடி கைது

உளுந்தூர்பேட்டை, ஜன. 7: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக கிளை செயலாளரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை கிராமத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கொண்ட வாட்ஸ் அப் குழு ஒன்று உள்ளது. இந்த குழுவில் இதே பகுதி சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் குமார் மகன் திவாகர்(43) என்பவர், தமிழ்நாடு முதல்வர், விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு செய்தார்.

இது தொடர்பாக எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில், ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட சுற்றுச்சூழல் அணி நிர்வாகியுமான நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் திவாகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். மேலும் இதே குழுவில் அதிமுக குறித்து சிலர் பதிவு செய்வதாகவும், அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அதிமுக ஒன்றிய செயலாளர் மணிராஜ் தலைமையில் திரண்ட அதிமுக நிர்வாகிகள், காவல் நிலையம் எதிரில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார் வந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர். தொடர்ந்து திவாகரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

The post முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு கருத்து அதிமுக செயலாளர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Ulundurpet ,Elavanasurkottai ,Ulundurpet, ,Kallakurichi district ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...