×

டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வு வருகிற 10ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: நடப்பாண்டுக்கான டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு வருகிற 10ம் தேதி முதல் தொடங்க உள்ளது என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதேபோல், அண்ணா பல்கலை வளாக கல்லூரிகள், மண்டல கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர பொது இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு (சீட்டா) தேர்ச்சி பெற வேண்டும்.

இதுகுறித்து அண்ணா பல்கலை டான்செட் செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்ட அறிவிப்பு: எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு வருகிற மார்ச் 9ம் தேதி காலையும், எம்.பி.ஏ., தேர்வு மதியமும் நடக்கிறது. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., முதுநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் 10ம் தேதி காலை நடைபெறும். தமிழகத்தின் 14 நகரங்களில் தேர்வு நடக்கும். டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு 10ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் இல்லை என்ற போதிலும், டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை நடைபெறும்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். கூடுதல் தகவல்களை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

The post டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வு வருகிற 10ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்: அண்ணா பல்கலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dancet ,Cheetah ,Anna University ,Chennai ,Aided Colleges ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...