×

மிக்ஜாம் புயல், மழையால் 2 முறை ஒத்திவைத்த தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநாடு சேலத்தில் வரும் 21ம் தேதி நடக்கிறது

சென்னை: மிக்ஜாம் புயலால் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி 2வது மாநாடு சேலத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும், இளைஞரணிக்கு தொண்டர்கள் மத்தியில் முக்கிய இடம் உண்டு. திமுக இளைஞர் அணிக்கு முதன் முதலில் கடந்த 2007 டிசம்பர் 15ம் தேதி முதல் மாநாடு நெல்லையில் நடத்தப்பட்டது. நெல்லை குலுங்கியது என்று சொல்லும் அளவிற்கு அந்த மாநாட்டை அன்றைய திமுக இளைஞரணி செயலாளராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி காட்டினார். வெள்ளை நிற சீருடையில் மிடுக்காக திறந்த ஜீப்பில் அவர் சென்றார்.

அந்த பேரணியை திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்தபடி அன்றைய முதல்வர் கலைஞர் பார்வையிட்டார். அந்தளவுக்கு மாநாடு எழுச்சியாக நடந்தது. அதன்பிறகு திமுக இளைஞரணி சார்பில் மாநாடு எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணிக்கு தலைமை ஏற்றதும் அதற்கான பணி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணி 2வது மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திமுக இளைஞர் அணியின் 2வது மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக இளைஞர் அணி மாநாடு டிசம்பர் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலத்த மழையால் திமுக இளைஞர் அணி மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக இளைஞர் அணி மாநாடு வருகிற 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: “மிக்ஜாம்” புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட “திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு”, வருகிற 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திமுக இளைஞர் அணி மாநாட்டில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புக்களை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. இந்த மாநாடு வர உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக பார்க்கப்படுகிறது.

The post மிக்ஜாம் புயல், மழையால் 2 முறை ஒத்திவைத்த தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநாடு சேலத்தில் வரும் 21ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : DMK ,Mikjam ,Youth Team 2nd Conference ,Salem ,Chennai ,DMK youth team ,Ilajanarani ,Mijam ,2nd ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள்