×

மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை பணிகள் 95 சதவீதம் நிறைவு: ஓரிரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி – சூளேரிக்காடு பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை கடந்த 2013 முதல் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலாவது ஆலைக்கு அருகே ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் ரூ.1516.82 கோடியில் 2வது சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இங்கு, தினமும் 15 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த, இரண்டாவது ஆலையில் சுத்திகரிப்பு செய்யப்படும் குடிநீர் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையர் மலை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன் பேட்டை பகுதிகளுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு நடைபெறும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: நெம்மேலியில் ரூ.1516.82 கோடி மதிப்பில் இரண்டாவது குடிநீர் சுத்திகரிப்பு ஆலை பணி 95 சதவீதம் முடிந்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் வழங்கும் நிலையில் உள்ளது. கடலில் அலை அதிகமாக இப்பதால் இன்னும் 20 மீட்டர் பைப் லைன் இணைப்பு கொடுக்கும் பணி தடைபட்டுள்ளது. அந்த பணி, முடிந்து விட்டால் முதற்கட்டமாக 100 மில்லியன் லிட்டர் வழங்கப்பட்டு, படிப்படியாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் தங்கு தடையின்றி வழங்கப்படும். இங்கிருந்து, உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பழைய மற்றும் புதிய வேளச்சேரி, பல்லாவரம் ராதா நகர் ஆகிய இடங்களுக்கு 48 கி.மீ. தூரத்திற்கு பைப் லைன் பதிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 19 இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆலையை திறந்து வைக்க முதல்வர் தேதி கொடுத்த பிறகு திறக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் தொடங்கப்படும்.

The post மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை பணிகள் 95 சதவீதம் நிறைவு: ஓரிரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும்; அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : water ,Nemmeli ,Mamallapuram ,Minister ,K. N. Nehru ,CHENNAI ,KN Nehru ,Nemmeli – Sulerikadu ,Dinakaran ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...