×

சூரியனை ஆராய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் சாதனை: ஒளிவட்ட பாதையில் நிலைநிறுத்தம்

சென்னை: சூரியனை ஆராயும் முதல் இந்திய விண்கலமான ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இலக்கை அடைந்து, எல்1 புள்ளியை மையமாக வைத்து ஒளிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி நிலவில் விண்கலனை தரையிறக்கி சாதனை படைத்தது. அடுத்த கட்டமாக சூரியனை ஆராயும் ஆதித்யா எல்-1 திட்டம் மற்றும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

அதில் தற்போது ககன்யான் திட்டத்தில் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 4 கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சூரியனை ஆராய்வதற்காக கடந்த செப்.2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஆதித்யா விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., துாரத்தில் எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

விண்ணில் ஏவப்பட்ட பின் செப்.3 முதல் 15ம் தேதிவரை புவி வட்டபாதையில் சுற்றி வந்த ஆதித்யா விண்கலம் 5 சுற்றுகளை முடித்து 5 கட்ட உயரம் அதிகரிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பூமியை சுற்றி முடித்த பின் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்1 லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் தனது பயணத்தை செப்.19ம் தேதி தொடங்கியது. ஏற்கனவே திட்டமிட்டபடி விண்கலத்தின் பாதையை சரி செய்யும் பணிகள் கடந்த அக்.6ம் தேதி நடத்தப்பட்டது. மேலும் எல்1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது முதல் விண்கலத்தில் உள்ள கருவிகள் செயல்பட தொடங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

சூரியன் மற்றும் பூமி ஆகிய இரண்டு ஈர்ப்பு விசைக்கு நடுவில் உள்ள அமைப்பை எல்1, எல்2, எல்3, எல்4 மற்றும் எல்5 என்று 5 லெக்ராஞ்சியன் புள்ளிகளாகபிரிக்கப்பட்டுள்ளது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் எல்1 பகுதியில் ஆதித்யா எல்1 செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆதித்யா எல்-1 விண்கலம் வரும் ஜன.7ம் தேதி லெக்ராஞ்சியன் புள்ளியை சுற்றி நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு நாள் முன்னதாகவே ஆதித்யா விண்கலத்தை எல் 1 புள்ளியில் ஒளிவட்டப்பாதையில் நிலை நிறுத்துப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4 மணியளவில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தில் திட்ட செயல்பாடு பிரிவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஆதித்யா விண்கலத்தை எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் இணைக்கும் முக்கிய செயல்முறை நடத்தினர். விண்கலத்தின் உந்துவிசை அமைப்பில் உள்ள லிக்விட் அபோஜி மோட்டார் எஞ்சின் மற்றும் உந்துகலன்களை பயன்படுத்தி சரியான இடத்தில் நிலைநிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று வெற்றிகரமாக எல் 1 புள்ளியை மையமாக கொண்டு ஹெலோ ஆர்பிட் எனப்படும் ஒளிவட்டப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. தற்போது வெற்றிகரமாக விண்கலம் நிலைநிறுத்தப்பட்டாலும் அதை நிலை வைத்திருப்பது சிக்கலானது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: எல்1 புள்ளியை அடைவது சவாலானது என்றால் அங்கு நிலையாக இருப்பது மிகவும் கடினமானது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் எல் 1 என்பது நிலையற்ற லெக்ராஞ்சியன் புள்ளிகளில் ஒன்று, அங்கு ஒரு விண்கலத்தை சரியாக வைத்திருப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. எல் 1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் வைத்தால், சூரியனை எந்த மறைவு மற்றும் கிரகணம் இல்லாமல் தொடர்ந்து பார்க்க முடியும். இது சூரிய செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்க உதவும், ஆதித்யா-எல்1 விண்கலத்தின் ஆயுட்காலம் ஐந்தாண்டுகள். இந்த காலகட்டத்தில் விண்கலத்தில் உள்ள கருவிகள் சூரியனின் வெளிப்புற அடுக்கு வெப்பமாவதின் சிக்கல், அதிகப்படியான வெப்ப வெளியேற்றம், சூரிய புயல் உள்ளிட்டவற்றை புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

* அசாதாரண சாதனை; மோடி
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “இந்தியா மற்றொரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் சூரியனின் ஆய்வுக்காக செலுத்தப்பட்ட முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக இலக்கை அடைந்தது. சிக்கலான விண்வெளி பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை தேசத்துடன் இணைந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்கான அறிவியலின் புதிய எல்லைகளை அடைய தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் ஆகியோரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

The post சூரியனை ஆராய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் சாதனை: ஒளிவட்ட பாதையில் நிலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,India ,L1 point ,ISRO ,Dinakaran ,
× RELATED 4 விமான நிலையங்களுக்கு மிரட்டல் சென்னை...