×

தமிழ்நாட்டில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு டோக்கன் வீடு வீடாக இன்று விநியோகம்: 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்

சென்னை: தமிழகத்தில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. வருகிற 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும். தமிழர் திருநாளான தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பெற வசதியாக, இன்று முதல் 9ம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த டோக்கனில், நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி பொதுமக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தை பெற்றுக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து வருகிற 10ம் தேதி (புதன்) முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த திட்டத்தை சென்னையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 10ம் தேதி காலை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் தொடங்கும். அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களின் சொந்த மாவட்டம், தொகுதியில் பொங்கல் சிறப்பு தொகுப்பை தொடங்கி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் வருகிற 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொங்கல் சிறப்பு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குடும்ப தலைவர் அல்லது குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் யாராவது ஒருவர் ரேஷன் கடைக்கு சென்று, கைவிரல் ரேகையை (பயோமெட்ரிக்) பதிவு செய்தால் மட்டுமே ரூ.1000 வழங்கப்படும். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடைபெறுவது பற்றி தெரிந்தால் பொதுமக்கள் 1967, 18004255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவித புகாருக்கும் இடமின்றி பொங்கல் தொகுப்பினை வழங்கி ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை, இந்த மாதம் பொங்கலுக்கு முன்னதாக அதாவது, வரும் 10ம் தேதியே 1 கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்குவதை 10ம் தேதி காலை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
* தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

The post தமிழ்நாட்டில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு டோக்கன் வீடு வீடாக இன்று விநியோகம்: 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Tamil Nadu ,CHENNAI ,Ration ,Sri Lanka ,Thai Pongal ,festival ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...