×

புதுச்சேரியில் வரி ஏய்ப்பை மறைக்க லஞ்சம் வாங்கிய 2 வணிகவரி துறை அதிகாரிகள் கைது: உடந்தையாக இருந்த பெண் உட்பட இருவர் சிக்கினர்

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த அரியூரில் சோலை செல்வராஜ் என்பவர், பிளாஸ்டிக் பேக் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை வணிவரித்துறை அதிகாரிகள் மூலம் சரி செய்ய முயன்றுள்ளார். இதற்காக புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ஆலோசகர் ராதிகாவை அணுகியுள்ளார். அப்போது வணிகவரித்துறையில், தனக்கு தெரிந்த அதிகாரிகள் உள்ளனர். இவர்களை வைத்து வரி ஏய்ப்பு விஷயத்தை வெளியில் தெரியாமல் மறைத்து விடுவதோடு, கணக்கையும் நேர் செய்து கொடுப்பதாக ராதிகா கூறியுள்ளார். இதற்காக தனக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் தொகையை லஞ்சமாக தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ராதிகா, புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கத்தில் உள்ள வணிகவரித்துறை உதவி அதிகாரிகளான ஆனந்தன் மற்றும் முருகானந்தத்திடம் பேசி லஞ்சம் கொடுத்து வரி ஏய்ப்பை சரி செய்துள்ளார். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வணிகவரித்துறை அதிகாரிகளின் செல்போன் உரையாடல்களை கண்காணித்தபோது வரி ஏய்ப்பு செய்ய உதவியது தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்திற்கு வந்த சிபிஐ அதிகாரிகள், அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வருமானவரித்துறை உதவி அதிகாரிகள் முருகானந்தம், ஆனந்தன் ஆகியோரை அலுவலகத்துக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சுமார் 15 மணி நேரம் நீடித்த சிபிஐ சோதனை நேற்று மாலை 4 மணிக்கு முடிந்தது. இதில் லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட ஆதாரங்கள் சிக்கியது. இதையடுத்து வருமானவரித்துறை உதவி அதிகாரிகள் முருகானந்தம், ஆனந்தன், தொழிற்சாலை உரிமையாளர் சோலை செல்வராஜ், ஆலோசகர் ராதிகா ஆகிய 4 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதியும், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியுமான சந்திரசேகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தினர். 4 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 4 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்வர் ரங்கசாமி பொறுப்பு வகிக்கும் துறையில் லஞ்சம் பெறப்பட்ட புகாரில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்காலில் உள்ள வீட்டிலும் ரெய்டு: கைது செய்யப்பட்ட உதவி வணிகவரித்துறை அதிகாரி முருகானந்தம் சொந்த ஊரான காரைக்கால் அடுத்த விழுதியூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் நான்கு பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை 11 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட உதவி வணிகவரித்துறை அதிகாரி முருகானந்தம் ஏற்கனவே காரைக்காலில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

The post புதுச்சேரியில் வரி ஏய்ப்பை மறைக்க லஞ்சம் வாங்கிய 2 வணிகவரி துறை அதிகாரிகள் கைது: உடந்தையாக இருந்த பெண் உட்பட இருவர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : 2 Commercial Tax Department ,Puducherry ,Cholai ,Selvaraj ,Ariyur ,Commercial Tax Department ,Puducherry Saram ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு