×

வணிக கப்பலை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை பிடிக்க இந்திய கடற்படை தீவிரம்: அரபிக்கடலில் தேடுதல் வேட்டை

புதுடெல்லி: அரபிக்கடலில் வணிக கப்பலை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை கடற்படை தீவிரமாக தேடி வருகிறது. அரபிக்கடலில் நேற்று முன்தினம் லைபீரியக் கொடியுடன் வந்த எம்வி லீலா நோர்போக் வணிக கப்பலை சிலர் கடத்த முயன்ற போது, இந்திய கடற்படை உடனடியாக ஐஎன்எஸ் சென்னை போர் கப்பல், பி-8ஐ கடல்சார் ரோந்து விமானம், எம்க்யூ9பி பிரிடேட்டர் டிரோன்களை அனுப்பி வணிக கப்பலை மீட்டது. அக்கப்பலில் இருந்து 15 இந்தியர்கள் உட்பட 21 மாலுமிகளும் மீட்கப்பட்டனர்.

கடற்படை வீரர்கள் வந்ததும் கடத்தல்காரர்கள் அனைவரும் தப்பியது தெரியவந்தது. அவர்கள் சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்களாக இருக்கலாம் எனவும், கடத்தல் தகவல் கிடைத்தவுடன் சில மணி நேரங்களில் கடல்சார் ரோந்து விமானம் லீலா நோர்போக் கப்பல் இருக்கும் பகுதியை சென்றடைந்து, அதன் மீது பறந்தபடி கண்காணித்த போதே இரவு நேரத்தில் அவர்கள் தப்பியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடற்கொள்ளையர்களை கடற்படை தீவிரமாக தேடி வருகிறது. இதற்காக அரபிக்கடலில் சந்தேகத்திற்கு இடமான கப்பல்களை கடற்படை ரோந்து கப்பல்கள் ஆய்வு செய்து வருகின்றன. தற்போது லீலாநோர்போக் கப்பலில் உள்ள சில பழுதுகளை சரிசெய்யும் பணி நடக்கிறது.

The post வணிக கப்பலை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை பிடிக்க இந்திய கடற்படை தீவிரம்: அரபிக்கடலில் தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.

Tags : Indian Navy ,Arabian Sea ,New Delhi ,Navy ,
× RELATED அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!!