ஓரேகான்: அமெரிக்காவில் 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமான கதவு நடுவானில் உடைந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் ஓரேகானின் போர்ட்லேண்டில் இருந்து கலிபோர்னியாவின் அண்டாரியோவுக்கு ஒரு விமானம் புறப்பட்டது. அலாஸ்கா ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானத்தில் 174 பயணிகள், 6 பணியாளர்கள் இருந்தனர். போயிங் 737-9 மேக்ஸ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் அண்டாரியோவுக்கு செல்ல புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் கதவு தனியாக உடைந்து கழன்றது.
இதனால் பயணிகள் பீதி அடைந்து கதறினர். இதனைத் தொடர்ந்து அவசரமாக போர்ட்லாண்டில் விமானம் தரையிறக்கப்பட்டது. கதவு தனியாக உடைந்து விழுந்த போது விமானம் 16,000 அடியில் உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. அதில் விமானத்தின் நடுவில் உள்ள ‘எக்ஸிட் டோர்’ உடைந்து விழுந்துள்ளது. விமான பாதுகாப்பு நிபுணர் அந்தோணி பிரிக்ஹவுஸ் கூறுகையில், ‘அந்தப் பயணிகள் எதிர்கொண்ட பயங்கர அனுபவத்தை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. அந்தச் சம்பவம் பயங்கர சத்தத்துடன் இருந்திருக்கும். காற்று அதிகமாக விமானத்துக்குள் நுழைந்திருக்கும். நிச்சயமாக இது ஒரு பயங்கரமான சூழ்நிலை தான்’ என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
The post நடுவானில் பறந்த போது பரபரப்பு; 16 ஆயிரம் அடி உயரத்தில் உடைந்த விமான கதவு: 174 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.