×

என்ன சொல்லுது உங்கள் ராசி?: ரிஷப ராசி குழந்தை, சிறுவர், மாணவர்

முனைவர் செ.ராஜேஸ்வரி

புத்திக்கூர்மை

ரிஷபராசிக் குழந்தைகள் பெரும்பாலும் தங்களை முன்னிறுத்திக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள் கிடையாது. யாரிடமும் முதலில், முன் வந்து, பேச மாட்டார்கள். ஆனால், எதிர்பார்த்ததைவிட 10 மடங்கு கூடுதலாகப் படிப்பார்கள். நல்ல புத்தி நுட்பம் உடையவர்கள். ஒருமுறை படித்தாலே, இவர்களுக்குப் பாடம் மனதில் தங்கிவிடும். அதன் பிறகு அதைப் பற்றி அலசி ஆராய்ந்து சில முடிவுகளைத் தங்கள் மனதிற்குள் வைத்திருப்பார்கள்.

பூ போல் வளர்த்தால்
பொன் போல் பலன் தருவர்

ரிஷப ராசி குழந்தைகள் இனிமை, அழுத்தம், பாசம், கொஞ்சல், நிதானம், சொகுசு, மென்மை நிறைந்தவர்கள். இவர்கள் பூ போன்ற மென்மையானவர்கள் என்பதால் இவர்களிடம் சற்று குரலை உயர்த்திப் பேசினால்கூட குழந்தைகளின் முகம் அனிச்ச மலர் போல் வாடிவிடும்.

தனித்திரு பசித்திரு விழித்திரு

மேற்சொன்னவற்றை விவேகானந்தர், ரிஷப ராசி குழந்தைக்குதான் சொல்லி இருப்பார் என்றே நம்பலாம். இக்குழந்தைகள் பெரும்பாலும், தனித்து இருப்பார்கள். அறிவுப் பசியோடு பசித்து இருப்பார்கள். அறிவைப் பெற்ற பின்பு, அறிவுக் கண்களை திறந்து வைத்து விழிப்புணர்ச்சியுடன் இருப்பார்கள்.

நோ சர்ப்ரைஸ்

ரிஷப ராசி குழந்தைகளிடம் எதையும் முன்கூட்டியே சொல்லி, அவர்கள் மனதைத் தயார் செய்ய வேண்டும். திடீரென்று ஒரு பிரயாணம் போகிறோம், ஒரு விழாவுக்கு போகிறோம், கிளம்பு என்று சொன்னால் அவர்கள் தயக்கம் காட்டுவர். வர மறுப்பர். விழா அல்லது பயணம் பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல, அவர்கள் மனம் அதற்கு தயாராகி இருக்காது. எனவே மாலையில் ஒரு விழாவுக்குப் போக வேண்டும் என்றால், காலையிலேயே சொல்லிவிட வேண்டும்.

புதுமை அச்சம்

ரிஷப ராசிக் குழந்தைகள், புதிய மனிதர்களைச் சந்திக்க தயங்குவர். புதிய விஷயங்களை ஏற்றுக் கொள்வதற்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டுவார்கள். ரிஷப ராசி குழந்தையைப் பிடித்து விருந்தினர் முன் கொண்டு வந்து நிறுத்தி ரைம்ஸ் சொல்லு, பாட்டு சொல்லு என்று சொல்லுதல் கூடாது. அவர்கள் அந்நேரம் எதையும் சொல்ல மாட்டார்கள் அவர்களுக்கு தங்களைப் பிறர் முன் `ஷோ’ காட்டுவதில், விருப்பம் இருக்காது.

ஒற்றைச் சொல் விமர்சனம்

ரிஷப ராசி சிறுவர்களிடம் பள்ளி ஆசிரியர்களைப் பற்றி உறவினர்களைப் பற்றி கேட்டால், இவர்களுடைய ஒற்றை வார்த்தை விமர்சனம் நம்மை ஒரு மணி நேரம் சிந்திக்க வைக்கும்.

விளையாட்டு

ரிஷப ராசி சிறுவர்கள் பெரும்பாலும் வெளியே போய் ஓடி ஆடுவதை விரும்புவதில்லை. அவர்கள் நிழலில், வீட்டின் ஓர் அறையில், தாழ்வாரத்தில், தோட்டத்தில், திண்ணையில் அமர்ந்து கேரம்போர்டு, செஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவர்.

நிதானமே பிரதானம்

ரிஷப ராசி சிறுவர்கள் வெகு நிதானமாக செயல்படுவார்கள். வெளியே கிளம்புவதாக இருந்தாலும், பரீட்சைக்கு, போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதாக இருந்தாலும், அவசரம் பதற்றம் எதுவும் இன்றி நிதானமாக செயல் திட்டம் தீட்டி, டைம் டேபிள் போட்டு செயல்படுவதில் கெட்டிக்காரர்கள். காலத்தின் அருமை கருதி நேரத்தை வீணடிக்காமல் செயல் படும் ரிஷப ராசி சிறுவர்கள் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து வளவளவென்று பேசுவதோ கேலி கிண்டல் செய்வதோ கிடையாது. பள்ளிக் கூடத்துக்கு போகும்போதும் வரும்போதும்கூட அமைதியாக மனப்பாடச் செய்யுள்களை மனதிற்குள் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

சொந்த முயற்சியே சிறந்த பலன்

ரிஷப ராசிக் குழந்தைகளின் படிப்புக்கு பெற்றோர், ஆசிரியர்களின் துணையே தேவையில்லை. ஆசிரியர் பாடங்களை வாசித்து விளக்கிச் சொல்லித் தர வேண்டும். பெற்றோர் பிள்ளைகளின் படிப்பை கண்காணிக்க வேண்டும் என்பது ரிஷப ராசி சிறுவர்களைப் பொறுத்தவரை தேவையில்லை. தன் முயற்சி தன்முனைப்பு உடையவர்கள் என்பதால் தாமாகவே படித்து முன்னேறிவிடுவர். பிளஸ் டு அல்லது டிகிரி படித்தால்கூட போதும். இவர்கள் மேற்படிப்பை தாமாகவே தொலைதூர திட்டக்கல்வியில் சேர்ந்து படித்து பல முதுகலை பட்டங்களையும் முனைவர் பட்டத்தையும் பெறுவார்கள். பெரும்பாலும் இக்குழந்தைகள் நூலகத்தில் அல்லது ஏதேனும் ஒரு ஆசிரியரை குருநாதராகக் கொண்டு அவருடன் அவருடைய சொற்களை கேட்டுக் கொண்டு இருப்பது வழக்கம். ஓரிரு நண்பர்கள் பேருக்கு ஒரு உதவிக்கு வைத்திருப்பார்கள். பேச்சுப் போட்டி, பட்டி மன்றம் turn coat போல் பேசி ஈர்க்கும் போட்டிகளில் கலந்து கொள்வர்.

தன்னலமும் தற்சார்பும்

ரிஷப ராசி குழந்தைகள் தனக்காக வாழ்கின்ற குழந்தைகள். தொண்டுள்ளம் கொண்டவர் இல்லை. முந்திக்கொண்டு பிறருக்கு உதவுவதில்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பார்கள். யாருக்காகவும் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை மாற்றிக்கொள்ள முன்வருவதில்லை.

நாசூக்கு நிறைந்தவை

இவர்களின் ராசி அதிபதி சுக்கிரனாக இருப்பதினால், மென்மையான இதமான சுகமான அழகும் கவர்ச்சியும் பொருந்திய நல்ல வாசம் நிறைந்த விஷயங்களை மட்டுமே இக்குழந்தை விரும்பும். எனவே இந்த குழந்தைகளை பூப்போல வளர்த்தால் அவை பொன் போல பலன் தரும்.

ரிஷப ராசியின் கோபம்

ரிஷப ராசி சிறுவர்களுக்கு பெரும்பாலும் கோபம் வராது. பள்ளி, கல்லூரிகளில் பிடிக்காத இடத்திலிருந்து பிடிக்காத மாணவர்களை விட்டு விலகி வந்து விடுவது வழக்கம். ஆனால், யாராவது வம்புச் சண்டைக்கு இழுத்து இவர்களைக் கேலி செய்தால், இவர்களுக்கு `சட்’ என்று ஒரு கோபம் வரும் பாருங்கள்! ஓங்கி முகத்தில் ஒரு குத்து விடுவர்.

The post என்ன சொல்லுது உங்கள் ராசி?: ரிஷப ராசி குழந்தை, சிறுவர், மாணவர் appeared first on Dinakaran.

Tags : S. Rajeshwari Buddhikurmai Rishapurasi ,
× RELATED திருவண்புருஷோத்தமம் புருஷோத்தம பெருமாள்