×

கம்பம் நகரில் சிறப்புற அமைந்துள்ள கம்பராய பெருமாள் கோயிலில் ரூ.5 கோடி திருப்பணிகள்

*எம்எல்ஏ ராமகிருஷ்ணன் ஆய்வு

கூடலூர் : கம்பம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் கோயிலில் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெறும் திருப்பணிகளை எம்எல்ஏ ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் கம்பம் ஸ்ரீ கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் கோயில் முக்கிய இடம் பெறுகிறது. இங்கு சிவன், பெருமாள் கோயில்கள் ஒரே வளாகத்தில் தனித்தனி கொடி மரத்துடன் உள்ளன. இக்கோவிலில் உபயதாரர்கள் முலம் சஷ்டி மண்டபம் சீரமைத்திட, ராஜகோபுரம் மேம்படுத்திட, உணவுக்கூடம், சிமென்ட் சாலை, சுவாமி சன்னதி விமானம் புதுப்பித்தல், தாயார் சன்னதி விமானம் புதுப்பித்தல், சஷ்டி மண்டபம் தட்டோடு பதித்தல் விநாயகர் சன்னதி புதுப்பித்தல், கொடிமரம் மெருகூட்டல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை திருப்பணிக்குழு தலைவரான கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது திருக்கோயிலில் திருமண மண்டபம், சிவன் மற்றும் பெருமாள் சன்னதிக்கு தனித்தனி நந்தவனம் அமைக்க உள்ள இடங்களையும், நவகிரகத்திற்கு ஒன்பது விருட்சங்கான வன்னி, அருகம்புல், கருங்காலி, முருக்கன், அத்தி, எருக்கன், நாயுருவி, அரசமரம், தர்ப்பை புல் உள்ளிட்டவை நடப்பட்டு பக்தர்கள் வழிபடுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். பின்னர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக ரூ.1.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை திறந்துவைத்தார்.

இதுகுறித்து எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கூறியதாவது: கம்பம் காசி விஸ்வநாதர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ள நிலையில், குடமுழுக்கு, திருப்பணிகள் செய்யவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சட்டமன்றத்தில், கம்பம் தொகுதியிலுள்ள எந்தெந்த திருகோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என்பது குறித்து விரிவாக பேசினேன். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு திருப்பணிகள் நடத்த அனுமதி, திருமண மண்டபம் தேவை, உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் ஞானம்மன் கோயிலுக்கு திருப்பணி, திருமண மண்டபம், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் திருக்கோயிலுக்கு திருப்பணி மற்றும் திருமண மண்டபம் தேவை என்று கோரிக்கை வைத்தேன்.

இந்த மூன்று கோரிக்கைகளும் சட்டமன்றத்தில் பேசப்பட்டு, அது அறிக்கையாக வெளியிடப்பட்டு தற்போது மூன்று கோயில்களிலும், துரிதமாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கம்பம் காசிவிஸ்வநாதர் கோயிலில் திருமண மண்டபம் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்படும் நேரத்தில், மற்ற இரு கோயில்களிலும் திருமண மண்டபம் கட்டுவதற்கான அனுமதி பெற்று அதற்குண்டான நிதியாக ரூ.4 கோடியே 60 லட்சம் தரப்பட்டிருக்கின்றது.

அடுத்ததாக புதுப்பட்டி திருநீல கண்டேசுவரர் திருக்கோயில், உத்தமபாளையத்தில் முத்துக்கருப்பணசாமி திருக்கோயில், பண்ணைப்புரம் மல்லிங்கீஸ்வரர் திருக்கோயில், கம்பம் சுருளி வேலப்பர் சுப்ரமணியசாமி கோயில்களில் திருப்பணிகளை நடத்தவேண்டும் என்று கேட்டு அனுமதி பெற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கோயில்களிலும் திருப்பணிகள் தொடக்க நிலையில் உள்ளது.
காசி விஸ்வநாதர் கோயிலில் சிவபெருமான் வீற்றிருக்கும் கருவறைக்கு மேல் உள்ள விமானத்தில் சுதைகள் பணி, பராமரிப்பு பணி மற்றும் பஞ்சவர்ணத்தில் வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கந்தர் சஷ்டி மண்டபத்தில் தட்டோடுகள் பதிக்கின்ற வேலையும் முடிவுற்றது. பரிவார தெய்வங்கள் விநாயகர், தட்சணாமூர்த்தி, பைரவர், நவகிரகங்கள், நந்தி ஆகிய கோயில்களுக்கு பராமரிப்பு வைலையும், மராமத்து வேலையும், பஞ்சவர்ணம் தீட்டும் வேலையும் மீதமாக இருக்கின்றது. கோயில் சார்பாக நாள்தோறும் 25 பேருக்கு அன்னதானம் (இறை பிரசாதம்) வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அமர்ந்து சாப்பிட போதுமான உணவுக்கூடம், சமையலறை இல்லை என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

அதற்காக தற்போது 15 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, நிதியும் பெற்றப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. இந்த அனைத்து பணிகளுக்கும் அனுமதியளித்த தமிழக முதல்வருக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வு பணிகளின்போது கம்பராய பெருமாள் திருக்கோயில் நிர்வாக அலுவலர் சுரேஷ், கம்பம் நகர திமுக செயலாளர்கள் (வ) வீரபாண்டியன், (தெ) பால்பாண்டிராஜா, மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் இரா.பாண்டியன், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சூர்யா தங்கராஜா, அறநிலைத்துறை உறுப்பினர் முருகேசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், திமுகவினர் உடனிருந்தனர்.

காவல் அதிகாரிகளுக்கு அறை…

இக்கோயிலில் ரூ.12 லட்சத்தில் தினந்தோறும் ஆன்மீக சொற்பொழிவு நடத்த கலையரங்கம், ரூ,15 லட்சம் செலவில் மூன்று கடைகள், ரூ.5 லட்சத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கான அறை, 12 லட்சம் ரூபாய் செலவில் மடப்பள்ளி நவீன மயமாக்கல் ஆகிய பணிகள் உபயதாரர்கள் மூலமாக துவக்கப்பட்டு விரைந்து முடிக்கப்படும்.

கோயிலின் பிரதான சாலையில் பேவர் பிளாக் கற்கள் பதித்து சோலார் மின்விளக்கு அமைக்கப்படும். முதியோர்கள், பக்தர்கள் அமர்வதற்கு சாய்வு கிரானைட் இருக்கைகள், 27 நட்சத்திரங்களுக்கான விருட்சம், சிவன் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் தனித்தனி நந்தவனம், வளாகத்தைச் சுற்றி மருத்துவப்பலன் தருகின்ற மரக்கன்றுகள் வைத்து பசுமை நிறைந்த வளாகமாக மாற்றப்படும் என்றும் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ கூறினார்.

The post கம்பம் நகரில் சிறப்புற அமைந்துள்ள கம்பராய பெருமாள் கோயிலில் ரூ.5 கோடி திருப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Kambaraya Perumal Temple ,Kampam Nagar ,MLA ,Ramakrishnan ,Sri Kambaraya Perumal Kashi Viswanath Temple ,Theni district ,Kambam Sri ,Tirupanis ,Kambaraya ,Perumal ,Temple ,Kambam ,
× RELATED தேனி அருகே தனியார் கார் நிறுத்தும் இடத்தில் 700 மதுபாட்டில் பதுக்கல்!!