×

பெரணமல்லூரில் விவசாயிகளை அவதூறாக பேசிய வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் சஸ்பெண்ட்

*வீடியோ வைரலானதால் நடவடிக்கை

பெரணமல்லூர் : பெரணமல்லூர் பகுதியில் விவசாயிகளை அவதூறாக பேசிய வீடியோ வைரலான நிலையில், வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனராக கோவிந்தராஜன் பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழக அரசு மானிய திட்டத்தில் கொடுக்கும் பொருட்கள் மற்றும் விதை பொருட்களுக்கு உரிய ரசீது கொடுக்காமல் பொருட்களை விற்று வந்ததாக கூறப்படுகிறது‌.

இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி விவசாயி ஒருவர் இந்த மையத்தில் இருந்து வாங்கிச்சென்ற நெல் விதைகள் முளைக்காமல் போகவே உதவி இயக்குனரிடம் புகார் தெரிவிக்க வந்துள்ளார். மேலும், வல்லம் பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயி அந்த நேரத்தில் உளுந்து விதை வாங்கியதற்கு ரசீது கேட்டு கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த விவசாயிடம் உதவி இயக்குனர் திடீரென கோபமடைந்து அவதூறாக பேசி உள்ளார்.

இதுகுறித்து வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கடந்த 3ம் தேதி அலுவலகத்தின் எதிரே உதவி இயக்குனரை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட இணை இயக்குனர் ஹரக்குமார் பரிந்துரையின்பேரில், வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜனை நேற்று சஸ்பெண்ட் செய்து சென்னை வேளாண்மை ஆணையர் சுப்பிரமணியன் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், போளூர் வேளாண் உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். உதவி இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அறிந்த தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

The post பெரணமல்லூரில் விவசாயிகளை அவதூறாக பேசிய வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Assistant Director ,Agriculture Extension Center ,Peranamallur ,Agricultural Extension Center ,Govindarajan ,Peranamallur Agricultural Extension Center ,Thiruvannamalai District ,
× RELATED பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்