×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி பலியான பெண்ணின் தாய் வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யக் கோரிபலியான இளம்பெண்ணின் தாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சியின்போது 2018 மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். இதுதொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 2022 மே 18ம் தேதி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.

17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்தது. இதை ஏற்ற அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி கடந்த 2022 அக்டோபர் 17ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம்பெண் ஸ்னோலினின் தாய் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஆணைய பரிந்துரைப்படி காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா , நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை பிப். 21க்கு தள்ளிவைத்தது.

The post தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி பலியான பெண்ணின் தாய் வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Chennai ,AIADMK ,Tuticorin ,incident ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!