×

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டை சோதனையிட வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக மாநில அமைச்சர் ஜோதிபிரியோ மல்லிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நெருங்கிய உதவியாளர் ஷேக் ஷாஜகான். இந்நிலையில் ஷாஜகானுக்கு சொந்தமாக வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த ஷாஜகானின் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அதிகாரிகள் வந்த வாகனமும் கற்கள் வீசி நொறுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் ஆட்டோ மற்றும் பைக் மூலமாக அங்கிருந்து வெளியேறினர். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க கவர்னர் சி.வி.போஸ், சந்தேஷ்காளியில் ஏற்பட்ட இதுபோன்ற காடடுமிராண்டிதனமான செயலை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாதது அதிருப்தி தருகிறது. உரிய முறையில் உரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார். பாஜ மாநில தலைவர் சுகந்தா மஜூம்தர் இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எழுதிய கடிதத்தில்,‘‘அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மற்றும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தி இருக்கிறார். இதேபோல் காங்கிரஸ் மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில்,‘‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார்.

The post திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டை சோதனையிட வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,Pandemonium ,West Bengal ,Kolkata ,State Minister ,Jyotibriyo Mallik ,Sheikh Shahjahan ,Shahjahan ,Sandeshkali ,North 24 Parganas district ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...