×

உர தொழிற்சாலையை மூட கோரி எண்ணூரில் 10வது நாளாக மீனவர்கள் போராட்டம்

திருவொற்றியூர்: எண்ணூர் பெரியகுப்பத்தில் கோரமண்டல் உரத் தொழிற்சாலையின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 26ம் தேதி வாயு கசிந்தது. இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பெரியகுப்பம், சின்னாங்குப்பம் போன்ற மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் தொடர்ந்து 10 நாளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று எண்ணூர் தாழங்குப்பத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவ முகாம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறுகையில், ‘‘வளர்ச்சி என்பது தொலைதூரத்தில் இருக்கும் முதலாளிகளுக்காக உள்ளது. மக்களுக்கு என்ன வளர்ச்சி உள்ளது. திருச்சி விமானநிலையத்தை திறப்பதற்கு பிரதமரால் வரமுடிந்தது. ஆனால் அவரால் தூத்துக்குடிக்கு வர முடியவில்லை. தமிழகத்துக்கு கூடுதலாக நிதி கொடுத்திருப்பதாக கூறும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த நிதியை யாரிடம், எப்போது கொடுத்தார். மாநில அரசின் நிதியில்தான் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசுக்கென்று தனி வருவாய் இல்லை. இந்தியன் என்றால் இந்தி பேச வேண்டுமென ஒன்றிய அரசு நினைக்கிறது. ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் தாய் மொழியில் வழக்காடு மொழி உள்ளது. ஆனால் தமிழுக்கு அது கிடையாது. அண்ணாமலையை வாங்கித் தர சொல்லுங்கள். தமிழுக்கு இவர்கள் தரும் முன்னுரிமை என்ன, நாடாளுமன்றத்தில் தமிழ் மொழிக்கென்று கல்வெட்டு வைக்காதது ஏன்,’’, என்றார்.

The post உர தொழிற்சாலையை மூட கோரி எண்ணூரில் 10வது நாளாக மீனவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ennore ,Coromandel Fertilizer Factory ,Periyakuppam ,
× RELATED மனநலம் பாதித்த பெண் பலி இழுவை வாகனத்தை இயக்கிய போக்குவரத்து காவலர் கைது