×

போலீசார் போல் வாகன சோதனை நடத்தி மணி எக்சேஞ்ச் நிறுவன உரிமையாளரை வழிமறித்து 10,000 யூரோ, பைக் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் போலீசார் போல் வாகன சோதனை நடத்தி, மணி எக்சேஞ்ச் நிறுவன உரிமையாளரை வழிமறித்து 10 ஆயிரம் யூரோ மற்றும் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
எழும்பூரை சேர்ந்தவர் ரியாசுதீன் (55). எழும்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வெளிநாட்டு பணம் மாற்றி தரும் மணி எக்சேஞ்ச் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை 11.35 மணிக்கு தனது நிறுவனத்தில் இருந்து மண்ணடியில் உள்ள தனது நணபர் ஒருவரிடம் 10 ஆயிரம் யூரோ கொடுப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையில் சென்றபோது, வாகன சோதனை நடத்துவதுபோல், ரியாசுதீனை வழிமறித்த 2 பேர், ‘‘நாங்கள் போலீஸ், நீங்கள் வெளிநாட்டு பணம் கடத்துவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே உங்களை சோதனை நடத்த வேண்டும்,’’ என்று கூறினர். பிறகு இருவரும் ரியாசுதீனை சோதனை செய்து அவரிடம் இருந்து 10 ஆயிரம் யூரோ மற்றும் அவர் ஓட்டி வந்த பைக்கை பறித்தனர். வெளிநாட்டு பணத்திற்கான உரிய ஆவணங்களை காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டு, யூரோ மற்றும் பைக்கை பெற்றுச் செல்லுங்கள், என கூறிவிட்டு இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரியாசுதீன் நேராக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கூறி தனது யூரோ மற்றும் பைக்கை போலீசாரிடம் கேட்டார். ஆனால் போலீசார் நாங்கள் யாரையும் சோதனை செய்யவில்லை, உங்களை யாரே ஏமாற்றி யூரோ மற்றும் பைக்கை பறித்து சென்றதாக கூறினர். அதைதொடர்ந்து ரியாசுதீன் நடந்த சம்பவத்தை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழிப்பறி நடந்த கிழக்கு கூவம் சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று காவலர்கள் என வழிப்பறியில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post போலீசார் போல் வாகன சோதனை நடத்தி மணி எக்சேஞ்ச் நிறுவன உரிமையாளரை வழிமறித்து 10,000 யூரோ, பைக் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sindathirippet ,Riazuddin ,Egmore ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...