×

திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கனமழை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது கண்மாய் நீர்

ராஜபாளையம்: திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் வீடு இடிந்து சேதமடைந்தது; சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், குடியிருப்பு பகுதியில் கண்மாய்நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால், திருவில்லிபுத்தூரில் உள்ள பெருமாள்சேரி பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இரண்டு அறைகள் கொண்ட வீட்டின் ஒரு அறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், மற்றொரு அறையில் தூங்கிய 3 பேர் உயிர் தப்பினர். இது குறித்த தகவலின்பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். திருவில்லிபுத்தூரில் நேற்று இரவு பெய்த மழையளவு 70.30 மி.மீ ஆகும்.

ராஜபாளையம் அருகே சாலை துண்டிப்பு

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடையில் மழைநீர் வரத்து அதிகரித்து, ஓடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தன.

குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர்

இந்நிலையில், ராஜபாளையம் அருகே, சத்திரப்பட்டி வாகைக்குளம் பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் மழைநீர் ஓடைவழியாகச் சென்று குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால், வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளை கணக்கிட்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு பகுதியில் விடிய விடிய மழை

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய பெய்த மழையால், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள 47 அடி உயர பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 40 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 120 கனஅடியாக உள்ளது. வினாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கனமழை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது கண்மாய் நீர் appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputur, Rajapalayam ,Rajapaliam ,Thiruvilliputur, Rajapaliam ,Rajapalayam, Thiruvilliputur, Vathirairuppu ,Virudhunagar district ,Thiruvilliputur, ,Rajapalayam ,
× RELATED திருமணம் செய்துகொள்ள மறுப்பு...