×

பகவத்கீதை உரை: சுவாசம் போன்றதுதான் கர்மா

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 63 (பகவத்கீதை உரை)

நிராசீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ
சரீரம் கேவலம் கர்ம குர்வன்னாப்னோதி கில்பிஷம் (4:21)

‘‘சரீரத்தால் வினையாற்றுபவன் பாவத்தை அடைவதில்லை. அது எப்படி? அவன் ஆசையற்றவனாக இருப்பான், மனதை அலையவிடாதவனாக இருப்பான், உடலைத் தன் விருப்பம்போல செயல்பட விடாதிருப்பான், தன் உடைமைகளில் எந்த அக்கறையும் கொள்ளாதவனாக இருப்பான். தன் உடலால் வினைகளை மேற்கொள்பவன், அதனால் கொஞ்சமும் பாவம் அடையாதவனாகவே இருப்பான்!’’ எந்த ஒரு செயலை நம் உடல் மேற்கொள்கிறதோ அந்தச் செயலில் முழுமையாக ஈடுபடுபவன் தெளிவுடன் இருப்பான், அதனாலேயே அவனை எந்தப் பாவமும் அண்டாது.

வாகனம் ஓட்டிச் செல்கிறான் ஒருவன். அவனுடைய பரிபூரணமான கவனம் வாகனம் ஓட்டுவதிலேயே நிலைத்திருக்க வேண்டும். சாலை விதிகளை அனுசரிப்பதும், நிதான வேகத்தில் வாகனத்தை செலுத்துவதும், பிற வாகனங்களுக்கு எந்தவகையிலும், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதிருப்பதும் வாகனம் ஓட்டுவதாகிய செயலின் பரிபூரண நிலை. மனதை வாகனம் ஓட்டுவதில் செலுத்தாமல், குறிப்பிட்ட இடத்திற்கு வாகனத்தில் போய்ச் சென்றுவிட்ட பிறகு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயலைப்பற்றி இப்போதே நினைத்துக்கொண்டு செல்வது வாகனம் ஓட்டுவதாகிய கர்மாவை முழுமையாகச் செய்வதாகாது. எதிலும் அவசரம், எதிர்பார்ப்பு, ஏக்கம், பொறாமை, சுய அனுதாபம், சொந்தத் தகுதி பற்றிய தவறான உயர் மதிப்பீடு, பிறர் யோசனைகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஈகோ, விமரிசனங்களை சகித்துக்கொள்ள முடியாத ஆத்திரம்… எல்லாமே கர்மாவை இயல்பாகச் செய்ய விடாமல் தடுப்பவை.

இதற்கு முக்கிய காரணம், செய்யும் கர்மாவில் நாம் முழுமையாக ஈடுபடாததுதான். ஸ்ரீஅரவிந்த அன்னை சொல்வார்கள்: ‘ஆத்மார்த்தமான ஈடுபாட்டைக் காட்டும் எந்தச் செயலும் பூரணத்துவம் பெறும். உதாரணமாக, குளிப்பதாகிய செயலில் குளிப்பதைத் தவிர வேறு எந்த சிந்தனையிலும் மனம் நாட்டம் கொள்ளக்கூடாது. குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டுமே, அதற்குப் பிறகு காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டுமே, பின்னர் அலுவலகம் புறப்பட வேண்டுமே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால், குளியல் முழுமை பெறாது. குளியலுக்குச் சம்பந்தமே இல்லாத பிற எண்ணங்களின் தாக்கத்தால், இந்தச் செயல் சரிவர மேற்கொள்ள முடியாததாகிறது! ‘அரைகுறைக் குளியல்’ என்ற நிறைவற்ற கர்மாவாகி விடுகிறது!’

முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலுமே ஒரு தியானத்துக்கு ஒப்பானதாகிறது என்கிறார் ஸ்ரீஅன்னை. ‘செய்வன திருந்தச் செய்’ என்ற நம் மூதுரையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. திருந்தச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாதே! ஒரே செயலை மறுபடியும் செய்ய நேருகிறது என்றால் அதற்கு ஏதேனும் இடையூறுதானே காரணமாகிறது? நாம் திட்டமிடுவதில் வல்லவர்கள்.

இன்ன நேரத்துக்குச் சாப்பாடு, இன்ன நேரத்துக்குத் தூக்கம், இன்ன நேரத்துக்கு அலுவலகப் பணி என்று திட்டமிட்டுக் கொள்கிறோம். இந்தத் திட்டமிடுதலே பழக்கமுமாகிவிடுகிறது. அதனாலேயே கண்கள் கடிகாரத்தைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. சாப்பாட்டையே எடுத்துக்கொள்வோம். காலை, மதியம், மாலை, இரவு என்ற வேளைகளை வகுத்துக் கொண்டு சாப்பிட்டுப் பழகிவிட்டோமானால், அந்தந்த வேளையில் தானாகப் பசியெடுக்கிறது! அதாவது, பசி என்ற உணர்வை அந்த நேரம் மிகச் சரியாக உணர்த்துகிறது.

முந்தைய உணவு செரித்ததா இல்லையா என்பதில் அக்கறை இல்லை, இந்த வேளைக்கு உணவு தேவை, அவ்வளவுதான்!இந்தப் பசி உணர்வை ஒத்திப்போட முடியாதபடி பழக்கம் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது. ‘அடடே நேரமாயிட்டுதே, சாப்பாட்டு நேரம்…’ என்றெல்லாம் யோசிக்கத் தோன்றிவிடுகிறது; தப்பிய அந்த நேரத்தில் செய்துகொண்டிருக்கும் வேலையும் அரைகுறையாகிப்போய்விடுகிறது. (சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே வாசனையை நுகராமல், ருசியை உணராமல் ஆன்ட்ராய்ட் ஃபோனில் ‘வாட்ஸ் ஆப்’ பார்த்துக் கொண்டே சாப்பிடுவதாகிய அந்த ‘கர்மா’‘வை நிறைவேற்றுபவர்கள் இப்போது அதிகமாகிவிட்டார்கள்!)

மூப்பு காரணமாக உடல் தளர்வடைந்தாலும், பழக்கம் காரணமாக உணவை ருசிப்பதில் மோகம் குறைவதில்லை. அதாவது, அப்படி உணவு அருந்துவது அந்த வயதான உடல் நிலைக்கு ஒவ்வாதது என்று தெரிந்திருந்தும்; அதனால் பாதிப்பு ஏற்பட்ட பிறகும்!‘எங்கேயோ பராக்கு பார்த்துண்டு சாப்பிடாதே, சாப்பாடு உடம்பிலே ஒட்டாது’ என்று நம் முதியவர்கள் நம்மைக் கண்டித்ததுண்டு. நாம் உண்ணும் உணவிலேயே நாம் முழு கவனம் செலுத்த வேண்டும் என்ற பாசம் மிகுந்த கட்டளை அது. அதனால், நாம் சிறப்பான உடல்நலத்தைப் பெற வேண்டுமே என்ற அக்கறை மிகுந்த கண்டிப்பு அது. ஐம்புலன்களையும் ஒருங்கே ஒரே பணியில் குவிக்க வேண்டும் என்ற தியானப் பயிற்சி அது.

‘நொறுங்கத் தின்றால் நூறு வயசு’ என்ற நம் முன்னோர்களின் இன்னொரு அறிவுரையும் இந்த ‘தியான’த்தை உள்ளடக்கியதுதான். நிதானமாக நன்கு மென்று தின்னும்போது நம் பற்கள், நாக்கை சேதப் படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. அவ்வாறு நொறுங்கத் தின்னப்படுபவை எளிதில் ஜீரணமாகின்றன. அவ்வாறு ஜீரணமாகும் உணவு சத்தாகி, நம் ரத்தத்தோடு கலந்து நமக்குத் திடமான உடல் சக்தியைக் கொடுக்கிறது. இவையெல்லாவற்றையும்விட, நொறுங்கத் தின்னும் அந்த நேரத்தில் வேறு சிந்தனை எதுவும் எழாமல் இருக்கிறது. அதனாலேயே இந்த கர்மாவை நம்மால் பூரணமாகச் செய்யமுடிகிறது!

ஆக, எந்தச் செயலைச் செய்தாலும் அதிலேயே முழுமையாக ஈடுபடுபவன் எந்தப் பாவத்துக்கும் ஆட்படமாட்டான். அவன்தான் அதைத் தவிர பிற எதையுமே சிந்திப்பதில்லையே, வேறு எதிலுமே அக்கறை கொள்வதில்லையே!

கொஞ்சம் யதார்த்தமாகச் சிந்திப்போம். எங்கும் பரவியிருக்கும் காற்றை நாம் எந்த அளவுக்குச் சுவாசிக்கப் பயன்படுத்துகிறோம்? அதுதான் நிறைய கிடக்கிறதே என்று நுரையீரல் வீங்கவீங்க சுவாசிக்கிறோமா, இல்லையே! அல்லது நாளைக்குக் கிடைக்காமல் போய்விடக்கூடும், அதனால் கொஞ்சமாகக் காற்றை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு, மிச்சத்தை நாளைக்கு சேமித்து வைத்துக்கொள்வோம் என்று யோசிக்கிறோமா, இல்லையே! அது தேவைக்கு மிகைப்படவும் கூடாது; குறையவும் கூடாது. இவ்வாறு நம் சுவாச உறுப்புகள் தாமாக, தேவைக்கு வேண்டிய காற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, வெளியே விடுகிறதே, இந்த நிலைதான் கர்மாவை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வது!

பார்வையில் பல காட்சிகள் படலாம், ஏதேனும் ஒன்றிரண்டில் மனம் லயிக்கலாம். காதுகளில் பல ஒலிகள் வந்து விழலாம், ஏதேனும் ஒன்றிரண்டில் மனம் லயிக்கலாம். ஆனால், சுவாசம்? அது எதற்குமே கட்டுப் படாதது. துர்நாற்றம் வீசினால் கர்சீப்பால் மூக்கை மூடிக்கொள்ளலாமே தவிர, அந்த கைக்குட்டையால் துர்நாற்றத்தை ‘வடிகட்டி’ காற்றைக் கட்டாயமாக உள்ளுக்கு இழுத்துக் கொள்ளத்தானே வேண்டும்! சுகந்த நறுமணமாக இருந்தால், கொஞ்சம் விரும்பி சுவாசத்தை அதிகளவுக்கு உள்ளிழுத்துக்கொள்ளலாமே தவிர, அந்தக் காற்றையும் வெளியே விடமுடியாமல் இருக்க முடிகிறதா? இயல்பான சுவாசம் முரண் படும்போது அது உயிரையே நிலைகுலைய வைக்கிறதே!

தான் இயற்றும் ஒவ்வொரு கர்மாவையும் இப்படி சுவாசிப்பதுபோல பாவிப்பதுதான் ஒரு ஞானியின் குணம். அவன் உடலால் கர்மா இயற்றுகிறான்; உள்ளத்தால், இந்திரியங்களால் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான். இதற்கு முக்கிய காரணம், அந்தக் கர்மாவைத் தன் உடல் மேற்கொண்டாலும், தான் கர்த்தா அல்ல என்பதை அவன் நிறைவாக உணர்ந்திருப்பதுதான்.

சாதனை என்றால் பிறரைப் பிரமிக்கச் செய்யும் சாகசமல்ல; எந்தக் குறையுமின்றி நலமாக வாழ்வதே சாதனைதான். உறக்கம் வந்தால் உறங்குவதும், பசித்தால் சாப்பிடுவதும், உணரும்போது உடல் கழிவை நீக்குவதும் சாதனைதான். ஒவ்வொரு நாளும் இப்படி இயற்கையாக வாழ முடிவதே சாதனைதான், நிம்மதிதான். இப்படி ‘சாதிக்க’ முடிந்தால் எந்தப் பிரச்னை வந்தாலும் அந்த பிரச்னையை எதிர்கொள்ள மனபலமும், உடல் பலமும் உறுதுணையாக இருக்கும். ஆக, இதுதானே உண்மையான சாதனை! உறங்கும் நேரத்தில் உறங்க இயலாமல், பசிக்கும் நேரத்தில் சாப்பிட முடியாமல், கழிவு வெளியேற்ற இயலாமல் போவது எல்லாம் வேதனை அல்லவா?

இதெல்லாம் சரீரத்துக்குத் தேவையான, அவசியமான கர்மங்கள். இவற்றை முழு நினைவோடு நிறைவேற்றுபவன் பந்தங்களில் சிக்குவதில்லை. அவசியத்துக்கு என்ன தேவையோ அதில் மட்டுமே ஈடுபடுவதால் ஏற்படும் நிறைவு இது. தேவைக்கு அதிகமாகிற எல்லாம் அனாவசிய பந்தத்துக்கு வழிவகுக்கின்றன அஜீர்ணம் மாதிரி!ஒரு செயலை செவ்வனே முடிக்க வேண்டும் என்ற தீர்மானம் மட்டும் இருந்தால் போதும், அதன் பலன் என்ன, விளைவுகள் என்ன என்ற கற்பனையில் இறங்கிவிட்டால் அந்தச் செயல் சீராக முடிவுறாமல் போகும். இதனால்தான் சிந்தனையைத் தன் மீது நிறுத்தி செயலை மேற்கொள் என்று பரந்தாமன் அறிவுறுத்துகிறார்.

யத்ருசாலாப ஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே (4:22)

‘‘தானாகவே கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைபவன், இரு நிலைகளிலும் சலனமடையாதவன், கொஞ்சமும் பொறாமைக் குணமில்லாதவன், தன்னால் சாதிக்க முடிந்ததோ, முடியவில்லையோ இதனால் சிறிதும் பாதிப்படையாதவன். இத்தகையவனேதான் இயற்றும் கர்மத்தால் பந்தப்படாதவனாக இருக்கிறான்.’’ கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைவது எல்லோராலும் முடியக்கூடியதா? சாதாரண விஷயம்; ஓட்டலுக்குப் போய் ஊத்தப்பம் ஆர்டர் செய்து, வந்தபின் அதை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

எதிரே அமர்ந்திருப்பவர் ஆனியன் ரவாதோசை ஆர்டர் கொடுக்க, அது அவர்முன் வைக்கப்படுகிறது. பொன்முறுகலாய், நெய் மணக்க மினுமினுத்துக் கொண்டிருக்கும் ரவாதோசையைப் பார்த்து, ‘அடடா, நாமும் இதையே ஆர்டர் செய்திருக்கலாமோ?’ என்று தோன்றுகிறது. ஆர்டர் செய்வதாகிய கர்மாவால் கிடைக்கும் ஊத்தப்பத்தை அமைதியாக ருசிப்பதில்தான் திருப்தி இருக்கிறது. அது இல்லாததால்தான் அடுத்தவர் ஆர்டர் செய்த ரவாதோசை மீது ஏக்கம் எழுகிறது!

இந்த ‘திருப்தி’ என்ற அம்சமானது மனிதரை இரட்டை மனோநிலைக்கு உள்ளாக்குகிறது. கிடைத்தவரை போதும் என்று எதிர்பார்க்கும் அவனுக்கு, அது அப்படியே கிடைத்துவிட்டால் உடனே மனோபாவம் மாறிவிடுகிறது. இன்னும் கொஞ்சம் கிடைத்திருக்கலாமோ? நம் தகுதிக்கு இப்போதைக்குக் கிடைத்திருப்பது சமமானதாக இல்லையோ? நம்மைப் போன்றவருக்கு வேறு வகையாக பலன் கிடைத்திருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், நமக்கு நஷ்டம் அல்லவா ஏற்பட்டுவிட்டது என்றெல்லாம் எண்ணத் தலைப்படுகிறது.

அதாவது, கிடைக்கும்வரை திருப்தி அடையத் தயாராக இருக்கும் மனம், கிடைத்த பிறகு, ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்…’ என்ற ஏக்கத்துக்கு அடிமையாகிவிடுகிறது! ‘லாபத்தில் நஷ்டம்’ என்ற புதிரான ஒரு கணக்கைச் சொல்வார்கள். அதாவது, பத்தாயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் ஒருவர், தன் வியாபாரத்தில் ஐந்தாயிரம்தான் லாபம் கிடைத்தது என்றால், அவரைப் பொறுத்தவரை ஐந்தாயிரம் ‘நஷ்டம்’! பொதுவாக, லாபம் என்பது செலவிட்ட தொகைக்கு மேலாகக் கிடைப்பது. அதாவது முதலீட்டுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் கிடைப்பது. ஆனால், அதற்கும் மேலாகக் கிடைத்ததில் திருப்தி இல்லை; இன்னும் கொஞ்சம் கிடைத்திருக்கலாமே என்ற ஏக்கம்தான் முதலில் நிற்கிறது.

வாழ்க்கையின் இரட்டை நிலைகள் ஒன்றுக்கொன்று நேர் எதிரானது என்றாலும், ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது விசித்திரம்தான். ஆமாம், ஏற்றம் இல்லை என்றால் தாழ்ச்சி ஏது? இன்பம் இல்லாவிட்டால் துன்பம் ஏது? வெறும் இன்பமாகவே வாழ்க்கை அமையுமானால் அதை ‘இன்பம்’ என்று எப்படிச் சொல்ல முடியும்? துன்பம் என்ற ஒன்று இருந்தால்தானே இன்பம் என்பதைப் பகுத்து உணர முடியும்? அதேபோலதான் வாழ்க்கையின் எல்லா இரட்டை நிலைகளும்.

ஒன்றில்லாவிட்டால் இன்னொன்றைப் புரிந்துகொள்ள முடியாது, உணர்ந்து கொள்ள முடியாது. உணவில் ஒரே ஒரு சுவைதான் என்றிருந்துவிட்டால், அதையே சாப்பிட்டு நாம் பழகிக்கொண்டு விடலாமே தவிர, மாறுபட்ட இன்னொரு சுவை இல்லாவிட்டால் முதல் சுவையின் அருமை நமக்குத் தெரியாமலேயே போய்விடும், இல்லையா? அதாவது, காரத்தை வைத்துதான் இனிப்பை அறியமுடிகிறது! அதேபோல இன்னொரு உதாரணம் நட்பும், பகையும். நட்பு இல்லாவிட்டால் பகை இல்லை.

பகை உருவாக வேண்டுமானால் ஆரம்பத்தில் நட்பு இருந்திருக்க வேண்டும். அப்படி நட்பு இருந்தால்தான், கருத்து வேற்றுமை உருவாகி, அது மனவேற்றுமையாக மாறி, பகையாக முடிகிறது. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பகை, மீண்டும் நட்பாக மாறமுடியும் என்பதுதான்! ஆனால், நட்பு இல்லா விட்டால் பகை இல்லை என்பதற்காக நட்பே இல்லாமல் வாழ்க்கையை நடத்தமுடியுமா? அதனால் நட்பு கட்டாயம் வேண்டும். பகை வரும் என்பதை எதிர்பார்த்தே நட்பை மேற்கொள்ள வேண்டும். அதுதான் சராசரியான, சாமானியனின் வாழ்க்கை. ஆனால், நட்பு பூண்டபோதும், பகை தோன்றியபோதும் இரண்டு நிலைகளையும் யாரால் ஒரேமாதிரியாக பாவிக்க முடிகிறதோ, அவரே ஞானி!

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post பகவத்கீதை உரை: சுவாசம் போன்றதுதான் கர்மா appeared first on Dinakaran.

Tags :
× RELATED கன்னியா ராசி குழந்தையை வளர்ப்பது எப்படி?