×

இரவிபுதூர் பகுதியில் நெல் வயல்களில் பூச்சி நோய் தாக்குதலா?

*வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு

நாகர்கோவில் : இரவிபுதூர் பகுதியில் உள்ள நெல் வயல்களில் பூச்சி நோய் தாக்குதல் உள்ளதா? என்பது தொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன் வேளாண்மை திட்டப் பணிகள் தொடர்பாக நேற்று ஆய்வு மேற்கொண்டார். தோவாளை வட்டாரத்தில் தோவாளை சானலில் நீர்வரத்து குறைவாக உள்ளது குறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தினார்.

பின்னர் நாகர்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தினை ஆய்வு செய்து இடுபொருட்கள் விவசாயிகளுக்கு சரியாக சென்றடைகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். விவசாயத்திற்கு முக்கிய இடுபொருளான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், பி ஓ எஸ் இயந்திரத்திற்கும் உண்மை இருப்பிற்கும் வேறுபாடுகள் உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

பின்னர் இரவிபுதூர் பகுதியில் உள்ள நெல் வயல்களில் பூச்சி நோய் தாக்குதல் உள்ளதா? என்பதனை உறுதி செய்வதற்கு திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் மைய தலைவர் சுரேஷ் மற்றும் பேராசிரியை கவிதா, வேளாண்மை துணை இயக்குனர் வாணி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு ஜோஸ் ஆகியோருடன் கூட்டாய்வு மேற்கொண்டார்.

இரவிபுதூர் பகுதியில் நெல் வயல்களில் காணப்படும் குருத்து ஈ தாக்குதலினால் இலை நுனிகள் மடிந்து காய்ந்து இருப்பதினையும் இவற்றின் தாக்குதல் 25 சதவீதத்துக்கு மேல் பொருளாதார சேதநிலையை தாண்டும் போது வயலில் நீரை வடிய விட்டு பின் மாலை வேளையில் குளோர் பைரிபாஸ் 20 ஈசி 1250 மில்லி /ஹெக்டேர் அல்லது பிப்ரோனில் ஐந்து சதம் எஸ்சி 1000-1500 கிராம்/ஹெக்டேர் என்ற அளவில் இடுவதற்கு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

வயலில் பொட்டாஸ் உரமிடுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன் எடுத்துரைத்தார். மேலும் வட்டார அளவில் உள்ள கள அலுவலர்கள் அவ்வப்போது பயிரினை கண்காணித்து பூச்சி கட்டுப்பாடு நோய் தாக்குதல் விவரங்களை உடனடியாக ஆய்வு செய்து அதற்குரிய பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது தோவாளை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுனில் தத், வேளாண்மை அலுவலர் ரக்ஷனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post இரவிபுதூர் பகுதியில் நெல் வயல்களில் பூச்சி நோய் தாக்குதலா? appeared first on Dinakaran.

Tags : Navibudur ,Nagargo ,Kanyakumari District ,Associate Director ,Albert Robinson ,Naviputur ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...