×

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாராந்திர மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம்

*64 பேருக்கு தேசிய அடையாள அட்டை

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ேதசிய அடையாள அட்டை வழங்கும் வாராந்திர சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், 64 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை மற்றும் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(யுடிஐடி) வழங்குதல் மற்றும் உதவி உபகரணங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று நடத்தப்படுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்(பொறுப்பு) சரவணன் முன்னிலையில் நடந்த இந்த முகாமில், 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
முகாமில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது மூக்கு தொண்டை மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை, பொது மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளின் உடல் நலன் பாதிப்புகளை பரிசோதித்து, அடையாள அட்டைகள் பெற தகுதி மற்றும் பாதிப்பின் சதவீதம் குறித்து சான்று வழங்கினர். மேலும், அடையாள அட்டைகளை புதுப்பித்தல் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில், மறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பின் சதவீதம் அடிப்படையில் அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டது.

அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பயண சலுகை அடையாள அட்டை புதுப்பித்தலுக்கான மனுக்களும் பெறப்பட்டன. நேற்று நடந்த முகாமில் 64 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை தொடர்பான கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

The post திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாராந்திர மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai district ,
× RELATED பணம் வசூலிக்க சென்ற நிதிநிறுவன...