×

கடலூரில் தொடங்கியது ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்

*ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்

கடலூர் : ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் கடலூரில் தொடங்கியது. இதில் சென்னை, விழுப்புரம், புதுச்சேரி உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர்
அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 2024ம் ஆண்டிற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. இதற்காக சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் புதுச்சேரி உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.

அதை தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுமுன்தினம் நள்ளிரவு துவங்கியது. ஆட்சேர்ப்பு முகாமையொட்டி, அண்ணா விளையாட்டரங்கில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வரும் 13ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.விளையாட்டரங்கம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஆட் சேர்ப்பு முகாமுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆட்சேர்ப்பு முகாம் நள்ளிரவு 12 மணிக்கு துவங்கியது. இதற்காக நேற்றுமுன்தினம் மாலை முதலே இளைஞர்கள் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குவிய தொடங்கினர்.

முகாமில் பங்கேற்றவர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ்கள், காவல்துறை நடத்தை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்பட 18 வகையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதன் பின்னர் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் மார்பளவு, எடை உயரம் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. இந்த உடற்தகுதி தேர்வு காலை 6 மணி வரை நடைபெற்றது. இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஓட்டப்பந்தய போட்டியில் 3 பேர் காயம்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமில், உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்டம் நரியம்பாடியை சேர்ந்த பிச்சை ஆண்டி மகன் மோகன் (20), மகேஸ்வரன் மகன் மோகன் குமார் (19), ஆரணியை சேர்ந்த சேகர் மகன் குமரகுரு (19) ஆகியோர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதில் மோகன் குமாருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கடலூரில் தொடங்கியது ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Army ,Cuddalore ,Chennai ,Villupuram ,Puducherry ,Indian Army ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...