×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: போலீஸ், அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு!!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்கு பதியக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவராகக் குற்றம்சாட்டப்பட்ட அன்றைய தென் மண்டல ஐ.ஜி.சைலேஷ்குமார் யாதவுக்குத் தமிழ்நாடு அரசு டிஜிபியாகப் பதவி உயர்வு வழங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, 2018ல் உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல் துறை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்கு பதியக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலின் என்பவரின் தாயார் வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொடந்துள்ள மனுவில்; அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ், அதிகாரிகள் மீது வழக்கு பதியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 21ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: போலீஸ், அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Madras High Court ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu ,South Zone ,IG ,Sailesh Kumar Yadav ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...