×

‘இந்த வயதில் யாரும் காதலிக்காதீர்கள்’ மாணவர்கள் சொந்த காலில் நின்று உங்களுடைய முடிவுகளை செயல்படுத்த வேண்டும்

*கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் கலெக்டர் பேச்சு

திருப்பத்தூர் : மாணவர்கள் சொந்த காலில் நின்று உங்களுடைய முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் கலெக்டர் மாணவர்களிடையே பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதியதாக கட்டப்பட்டுள்ள இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை திற்ந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட எழுத்துப்போட்டிகளில் வெற்றிபெற்று முதல் 3 இடங்களை பிடித்த 3 மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ₹15 ஆயிரம் மதிப்பில் காசோலைகளை கலெக்டர், எம்எல்ஏ வழங்கினார்கள். அப்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாணவர்களிடையே பேசியதாவது:

கந்திலி ஒன்றியம் கரியாம்பட்டி அரசு கலைக்கல்லூரி புதிய ஆய்வக கட்டடத்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு உரையாற்றிய அனைவரும் உங்கள் மீது அன்பு கொண்டு கல்லூரி பருவம் எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உரையாற்றினார்கள். சூழ்நிலை மற்றும் சுற்றுப்புறம் நமது வாழ்க்கையை மாற்றும், அதனால் அனைவரும் கல்லூரி வாழ்க்கையை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்ற பொழுது வாழ்க்கையில் வெற்றி பெறலாம். எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமில்லை, நாம் எப்படி படிக்கிறோம், நமது வாழ்க்கை எப்படி உருவாக்கிக் கொள்கிறோம், வாழ்வில் என்னவாக ஆக வேண்டும் என்பதுதான் முக்கியம்.

மேலும் வாழ்வில் லட்சியம் இருந்தால் தான் இலக்கை நோக்கி பயணிக்க முடியும். இலக்கு மாறிக்கொண்டே இருக்கலாம், அதற்காக துவண்டு போய் இருக்கக் கூடாது. அதை கட்டமைப்பது எப்படி என்பதை அறிந்து செயல்பட வேண்டும். ஒருவரின் எண்ணம் ரொம்ப முக்கியம். நீங்கள் எதுவாக ஆக விரும்புகிறீர்களோ அதுவாகவே மாறுவீர்கள் என்று புத்தர் அழகாக சொல்லி இருப்பார்.

பெற்றோர்களை மனதில் வைத்துக் கொண்டு அவர்களிடம் எதுவும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் எதிர்பார்த்து, அவர்களுக்கு நீங்கள் என்ன தரப்போகிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் உங்களது பிள்ளைகள் உங்களை பெருமையாக பேசுகின்ற அளவுக்கு நீங்கள் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை உணர வேண்டும். மேலும் இந்த வயதில் யாரும் காதலிக்காதீர்கள். நீங்கள் எப்பொழுது சொந்தக் காலில் நின்று செயல்பட தொடங்குகிறீர்களோ அப்பொழுதுதான் உங்களுடைய முடிவுகளை செயல்படுத்த முடியும். சிறப்பாக படித்து உங்களது பெற்றோர்களை, கல்லூரியை பெருமைப்படுத்துங்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்கின்ற மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தினை பயன்படுத்தி நல்ல விஷயத்திற்காக உதவித்தொகையை பயன்படுத்த வேண்டும். வாழ்வில் கல்விதான் மிகப்பெரிய சொத்து நாம் வைத்திருக்கின்ற பணம் அல்ல. மேலும் முதலமைச்சர் கல்விக்காக நான் முதல்வன் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்து ஒவ்வொருவரும் முதல்வனாக உணர வேண்டும் என்பதற்காக தலைப்பை வைத்துள்ளார்கள்.

நான் முதல்வன் என்ற சொல்கின்ற பொழுது உங்களிடம் தன்னம்பிக்கை உயரும். நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கேரியர் கைடன்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. படித்த முடித்தவுடன் என்ன திட்டங்கள், பல்வேறு படிப்புகள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். மேலும் உங்களுடைய மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ள கேம்பிரிட்ஜ் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில், கல்லூரி முதல்வர் சீனுவாச குமரன், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமுருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

The post ‘இந்த வயதில் யாரும் காதலிக்காதீர்கள்’ மாணவர்கள் சொந்த காலில் நின்று உங்களுடைய முடிவுகளை செயல்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Tirupattur District ,Kandili Union Kariyampatti Govt ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...