×

நெல்லை மாநகர, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ₹7.50 ேகாடியில் 2 புதிய நவீன நிர்வாக அலுவலக கட்டிடங்கள்

*காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நெல்லை : நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட ஆயுதப்படைக்கு ₹7.50 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு புதிய நவீன கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார். தமிழகத்தில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்த காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டவும், காவலர் குடியிருப்புகள் அமைக்கவும், ஆயுதப்படையில் புதிய கட்டிடங்கள் கட்டவும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் காவல் நிலையங்கள், குடியிருப்புகள் மற்றும் ஆயுதப்படைக்கு புதிய கட்டிடம் அமைக்கும் பணி கடந்த 12-11-2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 14 மாதங்களில் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய நவீன கட்டிடங்கள் கடந்த மாதம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி பாளையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நெல்லை மாநகர ஆயுதப்படை மற்றும் நெல்லை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ₹7.50 (ஏழு கோடி) மதிப்பில் நிர்வாக அலுவலகத்திற்கான இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நெல்லை மாநகர ஆயுதப்படை மற்றும் நெல்லை மாவட்ட ஆயுதப்படை புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னையில் இருந்தவாறு நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானம் வளாகத்தில் நடந்த விழாவில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி குத்துவிளக்கேற்றி வைத்தார். துணை கமிஷனர்கள் கிழக்கு மண்டலம் ஆதர்ஷ் பச்சேரா, தலைமையிடம் அனிதா, மாநகர ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனர் காமேஸ்வரன், நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேந்திரன், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரைச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

நெல்லை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடத்தில் தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் ஆகியவை அடங்கிய 40 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயுத வைப்பு அறை, கோப்பு அறை, கம்ப்யூட்டர் அறை, ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கென்று தனித்தனியாக ஓய்வறைகள், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டும், தீயணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதிகள் உட்பட பல்வேறு அறைகள் உள்ளன.

இதுபோன்று நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்திலுள்ள நிர்வாக அலுவலகத்தின் நவீன வசதிகளுடன் தரைத்தளம், முதல் தளம் உட்பட புதிய கட்டிடத்தில் 40 அறைகள் அமைக்கப்பட்டன. இதில் ஆயுத வைப்பு அறை, கோப்பு அறை, கம்ப்யூட்டர் அறை, ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கென்று தனித்தனியாக ஓய்வறைகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும், தீயணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதிகள் உட்பட பல்வேறு அறைகள் உள்ளன.

நெல்லை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன், டிஎஸ்பி சுப்பிரமணியன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ், இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர்கள் சசிநாதன், சரவணன் மற்றும் காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post நெல்லை மாநகர, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ₹7.50 ேகாடியில் 2 புதிய நவீன நிர்வாக அலுவலக கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Tags : NELLAI ,DISTRICT ARMY COMPLEX ,Chief Minister ,M.K.Stalin ,Tamil ,Nadu ,Nellai City ,District Armed Forces ,Chennai.… ,Nellie City, District Armed Forces ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...