×

திருவாரூர், குடவாசல், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியங்களில் பொங்கல் செங்கரும்பு அறுவடைக்கு தயார்

*மாவட்டத்திற்கு 4 லட்சம் கரும்பு தேவை

*அரசு கொள்முதலால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர் : திருவாரூர், குடவாசல், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியங்களில் பொங்கலுக்கு செங்கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது.
மாவட்டத்திற்கு 4 லட்சம் கரும்பு தேவைபடுகிறது. அரசு கொள்முதலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாளாக நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்வது, வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்வர்.

இதுமட்டுமன்றி பொங்கலுக்கு முதல் நாளான போகி பண்டிகையன்று வீட்டில் இருந்து வரும் தேவையில்லாத பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்துவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்காக மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்ற பண்டிகைகளை விட, இந்த பண்டிகையானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி தாய்,தந்தை மற்றும் உறவினருடன் ஒன்றாக பொங்கலிட்டு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பண்டிகையை ஏற்ற இறக்கம் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கலாக கொண்டாட வேண்டும் என அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழாவானது ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் என்றாலே பச்சரிசி, வெல்லம் மற்றும் முந்திரி, திராட்சை, ஏலம், நெய் கொண்ட சர்க்கரைப்பொங்கல் மட்டுமின்றி வென் பொங்கலும் செய்யப்பட்டு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் இந்த பொங்கல் பண்டிகையில் செங்கரும்பு மற்றும் வாழைப்பழமும் இந்த பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், குடவாசல், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியங்களில் விவசாயிகள் வழக்கமாக இந்த செங்கரும்பு பயிரிட்டு வரும் நிலையில் நடப்பாண்டில் 40 ஏக்கர் பரப்பளவில் இந்த செங்கரும்பு பயிரிடப்பட்டு பொங்கல் பண்டிகை அறுவடைக்காக தயார் நிலையில் இருந்து வருகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கடந்த 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பச்சரிசி, வெல்லம், ரவை மற்றும் கோதுமை மாவு தலா ஒரு கிலோ வீதமும், முந்திரி மற்றும் திராட்சை தலா 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ,நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு மற்றும் சீரகம் தலா 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம்,உப்பு 500 கிராம் இவைகள் அனைத்தும் துணிப்பை ஒன்றில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிலையில் முழு கரும்பு ஒன்றும் என மொத்தம் 20 வகையான பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 3 லட்சத்து 86 ஆயிரத்து 659 பேர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

மேலும் கடந்தாண்டில் அரிசி மற்றும் சர்க்கரை தலா ஒரு கிலோ மற்றும் செங்கரும்பு இவைகளுடன் ரூ ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு செங்கரும்பு ஒன்று வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் 4 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த தொகுப்பு வழங்கப்படவுள்ள நிலையில் இதனுடன் முழு செங்கரும்பு ஒன்றும் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கான செங்கரும்பை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணியை விரைவில் கூட்டுறவு துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

The post திருவாரூர், குடவாசல், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியங்களில் பொங்கல் செங்கரும்பு அறுவடைக்கு தயார் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Gudavasal ,Mannargudi ,Needamangalam ,Unions ,Pongal ,Needamangalam Unions ,Thiruvarur ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...