திருச்சி, ஜன.5: மணப்பாறை அருகேயுள்ள பண்ணப்பட்டி கிராமத்தில் வேளாண்மை துறையில் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் விவசாயிகளுக்கு நெல்லுக்கு அடுத்து பயறு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து ஒருநாள் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் மோகனா தலைமை வகித்தார். பண்ணப்பட்டி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ராமேஷ் வரவேற்றார்.
வேளாண்மை உதவி இயக்குனர் நெல்லுக்கு அடுத்தபடியாக உளுந்து மற்றும் பச்சைப்பயிறு சாகுபடி இடுவதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கினார். இதன் மூலம் உர செலவு குறைப்பது மற்றும் இரட்டிப்பு வருமானம் வருவதும் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை அலுவலர் கண்ணன் வேளாண்மை துறையில் செயல்படும் திட்டங்கள் மற்றும் மானிய திட்டங்கள் பற்றி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் சிவக்குமார் டிரைகோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டை உபயோகப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
பயிற்சியில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு டிரைகோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டை வழங்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர் ஜோஸ்பின் மேரி நுண்ணீர் பாசனத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் மானிய கிடைக்கும் இடுபொருள்கள், பண்ணைக்கருவிகளின் தொகுப்பு குறித்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அபிராமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்தியசீலன் மற்றும் பிரியங்கா செய்திருந்தனர்.
The post மணப்பாறை அருகே பண்ணப்பட்டி கிராமத்தில் பயறு சாகுபடி பயிற்சி appeared first on Dinakaran.