×

தினகரன் செய்தி எதிரொலியால் பள்ளி அருகே தேங்கிய குப்பைகள் அகற்றம்

திருவாடானை, ஜன.5: திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்கீரமங்கலம் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி நுழைவு வாயிலின் அருகில் கழிவுநீர் செல்லும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் ஓட வழியின்றி நீண்ட நாட்களாக பள்ளி நுழைவு வாயிலின் அருகிலேயே தேங்கி நின்றது.

இதனால் அந்த கழிவுநீருடன் தேங்கிய மழைநீரில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தினமும் குப்பைகளை கொண்டு வந்து அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டாமல் இந்த தேங்கிய மழைநீரில் குப்பைகளை கொட்டினர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

மாணவர்களின் நலன்கருதி பள்ளி நுழைவு வாயிலின் அருகில் செல்லும் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்து தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக வெளியேற்றி விட்டு அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த ஜன.2ம் தேதியன்று செய்தி வெளியானது. இந்நிலையில் தினகரன் செய்தி எதிரொலியால் ஊராட்சி நிர்வாகத்தினர் அந்த பள்ளி நுழைவு வாயிலின் அருகில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ததுடன் அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி விட்டனர்.

The post தினகரன் செய்தி எதிரொலியால் பள்ளி அருகே தேங்கிய குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Dhinakaran ,Thiruvadanai ,Chinnakeeramangalam ,Tiruchi-Rameswaram National Highway ,Dinakaran ,
× RELATED நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்டத்...