×

கூடலூர் அருகே சாலையோர இரும்பு தடுப்புகளை திருடிய 3 பேர் கைது

 

ஊட்டி, ஜன.5: கூடலூர் அருகே தேவர் சோலை பகுதியில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள சாலையோர இரும்பு தடுப்புகளை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து தேவர்சோலை வழியாக அண்டை மாநிலமான கேரளாவிற்கு நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு அபாயகரமான இடங்களில் சாலையோரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில் இச்சாலையில் சர்க்கர்மூலா மற்றும் குஞ்சமூலா இடைப்பட்ட பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் காணாமல் போயிருந்தன.

இவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சாதிக் பாஷா தேவர்சோலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இரும்பு தடுப்புகளை திருடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் 9வது மைல் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து 40 மீட்டர் நீளத்திற்கு சாலையோர இரும்பு தடுப்புகளை கேஸ் வெல்டிங் மூலம் அருந்து திருடி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பந்தலூர் அருகே கொளப்பள்ளியை சேர்ந்த சந்தானம் (43), கோசாமி என்கிற மகாலிங்கம் (71), நெல்லியாளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்கிற சிவராஜ் (23) ஆகிய அவர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு தடுப்புகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிக்-அப் ஜீப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post கூடலூர் அருகே சாலையோர இரும்பு தடுப்புகளை திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Koodalur ,Ooty ,Devar Zoli ,Nilgiri district ,Devarsol ,Kerala ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் வட்ட...