×

15 மாநிலங்கள் வழியாக ராகுலின் நடைபயணம்: பாதை விவரம் அறிவிப்பு

புதுடெல்லி:ராகுல் காந்தி வரும் 14ம் தேதி துவங்கவிருக்கும் பாரத நியாய யாத்திரைக்கு பாரத ஒற்றுமை நியாய யாத்திரை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது, 15 மாநிலங்கள் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022 ம் ஆண்டு நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரைக்கு பின் நடந்த இமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா சட்ட பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து, வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து மும்பைக்கு ஜனவரி 14ம் தேதி பாரத நியாய யாத்திரை நடத்தப்படும் என தெரிவித்தார். இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று நடந்தது. ராகுல்காந்தியும் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் பாரத நியாய யாத்திரைக்கு பாரத ஒற்றுமை நியாய யாத்திரை என பெயர் மாற்றப்பட்டது.

இதுகுறித்து கட்சியின் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், ‘‘இந்த யாத்திரை 15 மாநிலங்களில் உள்ள 100 தொகுதிகள் வழியாக செல்லும். மொத்தம் 6,713 கிமீ தூரத்தை அவர் நடைபயணமாகவும், பேருந்து மூலமாகவும் செல்வார். 66 நாள்களுக்கு நடைபெறும் யாத்திரையில் இந்தியா கூட்டணியின் தலைவர்களும் பங்கேற்க அழைத்துள்ளோம்’’ என்றார். மணிப்பூரில் 107 கிமீ(1 நாள்)தூர நடைபயணம் மேற்கொள்வார்.

அங்கிருந்து, நாகலாந்து(2 நாள்), அசாம்(8 நாள்), அருணாச்சல் பிரதேசம்(1நாள்), மேகாலயா(1 நாள்), மேற்கு வங்கம்(5 நாள்), பீகார்(4 நாள்), ஜார்க்கண்ட்(8 நாள்), ஒடிசா(4 நாள்), சட்டீஸ்கர் (5நாள்), உ.பி(11 நாள்), ராஜஸ்தான்(1நாள்), ம.பி(7 நாள்), குஜராத் (5 நாள்) வழியாக மகாராஷ்டிரா (5 நாள்) செல்வார். மார்ச் 21ம் தேதி மும்பையில் யாத்திரை நிறைவடையும். அதிகபட்சமாக உபியில் 1074 கிமீ, ஜார்க்கண்டில் 804, ம.பி.யில் 698 கிமீ, சட்டீஸ்கரில் 536 கிமீ, மேற்கு வங்கத்தில் 523 கிமீ தூரம் யாத்திரை நடக்கிறது.

The post 15 மாநிலங்கள் வழியாக ராகுலின் நடைபயணம்: பாதை விவரம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rahul ,NEW DELHI ,RAHUL GANDHI ,BHARATA UNITY ,Congress ,Dinakaran ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான...