×

தேர்தல் பிரசாரத்தை முடக்குவதற்காக என்னை கைது செய்ய சதி: அமலாக்கத்துறை மீது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாய்ச்சல்

புதுடெல்லி: அமலாக்கத்துறையின் 3வது சம்மனை நிராகரித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் செய்வதை முடக்குவதற்காகவே என்னை கைது செய்ய ஒன்றிய பாஜ அரசு மற்றும் அமலாக்கத்துறை முயல்கிறது என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி மது பான கொள்கையின் முறைகேடு தொடர்பாக கலால்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்த மனீஷ் சிசோடியா, அதேப்போன்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் டெல்லி தலைமைச் செயலகம் அருகே, சிவில் லைன் பகுதியில் இருக்கும் கெஜ்ரிவாலின் இல்லத்தின் முன் போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பரபரப்பான சூழலில் கெஜ்ரிவால் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேசிய வீடியோவில், ‘‘சிபிஐ மற்றும் அமலாக்கதுறையின் மூலமாக பாஜ அரசு தன்னை தொடர்ந்து மிரட்டி வருகிறது.

என்னை கைது செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. மக்களவை தேர்தலில் பிரசாரம் செய்வதை தடுக்கவே என்னை கைது செய்ய பார்க்கிறார்கள். மணீஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின், சஞ்சய் சிங் ஆகியோர் பாஜ.வை எதிர்த்தார்கள். அதனால் தான் அவர்கள் இப்போது பழிவாங்கும் நடவடிக்கையாக சிறையில் இருக்கிறார்கள். குறிப்பாக பாஜ.வில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதன் எண்ணிக்கை ஒன்றிரண்டு கிடையாது. நாடு முழுவதும் இதே நிலை தான் நீடித்து வருகிறது.

நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் பாஜவுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் என் மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. நான் புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் என்று குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை, இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யவில்லை. ஆனால் வெறுமென ஊழல் என கூச்சலிட்டு வருகிறார்கள்,’’ என்ற கடும் குற்றச்சாட்டை முன்வைத்து பேசியுள்ளார்.

The post தேர்தல் பிரசாரத்தை முடக்குவதற்காக என்னை கைது செய்ய சதி: அமலாக்கத்துறை மீது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,CM ,Kejriwal ,New Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Directorate ,Union BJP government ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு...