×

மார்க்ரம் சதமடித்தும் தோற்ற தென் ஆப்ரிக்கா அடடே இந்தியா அபாரம்: சமனானது டெஸ்ட் தொடர்

கேப் டவுன்: தென் ஆப்ரிக்கா-இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் ஆட்டம் நேற்று முன்தினம் கேப் டவுனில் தொடங்கியது. டாஸ் வென்று களமிறங்கிய தெ.ஆவை முதல் இன்னிங்சில் 55 ரன்னுக்கு சுருட்டி, இந்திய பந்து வீச்சாளர்கள் சாதனைப் படைத்தனர். பதிலுக்கு முதல் இன்னிங்சில் இந்திய அணியை 153ரன்னில் ஆட்டமிழக்க செய்து அசத்தினர் தெ.ஆ பந்து வீச்சாளர்கள். ஆனாலும் 98 பின் தங்கிய நிலையில் தான் தெ.ஆ 2வது இன்னிங்சை தொடங்கியது. அதிலும் இந்திய பந்து வீச்சாளர்கள் முகேஷ், பும்ரா வேகத்தில் விக்கெட்களை இழக்க ஆரம்பித்தது தெ.ஆ. அதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் தெ.ஆ 2வது இன்னிங்சில் 3விக்கெட்களை இழந்து 17ஓவருக்கு 62ரன் எடுத்திருந்தது.

முதல் நாள் முழுவதும் 2 தரப்பு பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், ஒரே நாளில் 23 விக்கெட்களை இரு அணிகளும் பறிகொடுத்த சோக வரலாறு எழுதப்பட்டது. தெ.ஆ 36ரன் பின்தங்கி இருந்த நிலையில் 2வது நாளான நேற்று, களத்தில் இருந்த மார்க்ரம் 36, பெடிங்காம் 7ரன்னுடன் 2வது இன்னிங்சை தொடர் ந்தனர். பெடிங்காமை 11 ரன்னில் வெளியேற்றிய பும்ராவின் விக்கெட் வேட்டை வேகமெடுத்தது. அதனால் தெ.ஆ அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது.

அதே நேரத்தில் பொறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 99 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 106ரன் எடுத்திருந்திருந்த போது சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் தெ.ஆவின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்த போது அந்த அணி 36.5ஓவருக்கு 176ரன் எடுத்திருந்தது. இந்திய வீரர்களின் பும்ரா 6 விக்கெட்களை அள்ள, முகேஷ் 2, சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். உணவு இடைவேளைக்கு பிறகு 79ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா, 2வது இன்னிங்சை தொடங்கியது.

முதல் டெஸ்ட்டிலும், 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சிலும் சரியாக விளையாடாத ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 6பவுண்டரி உட்பட 28ரன் விளாசி ஆட்டமிழந்தார். வெற்றியை நெருங்கிய போது கில் 10, கோஹ்லி 12 ரன்னில் வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். அதனால் இந்தியா 3விக்கெட்களை இழந்து 12வது ஓவரில் 80ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 2வது நாளே அபார வெற்றியை சுவைத்தது.

கேப்டன் ரோகித் 17, ஸ்ரேயாஸ் 4ரன்னுடன் களத்தில் இருந்தனர். தெ.ஆ தரப்பில் ரபாடா, பர்கர், யான்சன் என பந்து வீசிய 3பேரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தெ.ஆ வில் நடந்த 25 டெஸ்ட் ஆட்டங்களில், இந்தியா 5வது வெற்றியை நேற்று பதிவு செய்துள்ளது. தெஆ 13ல் வென்று ஆதிக்கத்தை தொடர்கிறது(7 ஆட்டங்கள் டிரா).

* முழுக்க முழுக்க வேகப் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் விரைவாக முடிந்த இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக, முதல் இன்னிங்சில் 9 ஓவர்கள் வீசி வெறும் 15ரன் மட்டும் தந்து 6 விக்கெட்களை வீழ்த்திய முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

* தொடர் நாயகன்களாக முதல் டெஸ்ட்டில் 185ரன் விளாசிய டீன் எல்கர்(தெ.ஆ), மொத்ததில் 12விக்கெட் அள்ளிய பும்ரா(இந்தியா) ஆகியோர் தேர்வாகினர். டீன் எல்கர் இந்த ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

* குறைந்த பந்துகளில்(642) முடிந்த டெஸ்ட் ஆட்டங்களில் இந்த ஆட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் 1932ம் ஆண்டு ஆஸி-தெ.ஆ இடையே 656பந்துகளில் முடிந்த டெஸ்ட் ஆட்டமே இதுவரை முதல் இடத்தில் இருந்தது.

* தெ.ஆ அணிக்காக டெஸ்ட் ஆட்டங்களில் அதிவேகமாக சதம் விளாசிய 6வது வீரர் என்ற பெருமையை மார்க்ரம் பெற்றார்.

* கேப் டவுனின் நியூ லேண்ட்ஸ் களத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய 2வது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பும்ரா நிகழ்த்தியுள்ளார். அவர் இங்கு 18விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

* ‘சேனா’ எனப்படும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அதிகமுறை 5விக்கெட்களை அள்ளிய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா(6முறை)4வது வீரராக சேர்ந்து உள்ளார். முதல் இடத்தில் இருக்கும் கபில்தேவ் 7 முறை 5விக்கெட்களை அறுவடை செய்துள்ளார். கூடவே சேனா நாடுகளுக்கு எதிராக இந்தியா பெற்ற 6வது பெரிய வெற்றியாக இந்த ஆட்டத்தின் முடிவு உள்ளது.

* முக்கியமான விஷயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தெ.ஆ ‘தொடரை இழந்ததே இல்லை’ என்ற வரலாறு தொடர்கிறது. இரு அணிகளும் 4வது முறையாக டிரா செய்துள்ளன.

* தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் சூரியகுமார் தலைமையில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா டிரா செய்தது. கே.எல்.ராகுல் தலைமையில் ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இப்போது ரோகித் தலைமையில் டெஸ்ட் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

The post மார்க்ரம் சதமடித்தும் தோற்ற தென் ஆப்ரிக்கா அடடே இந்தியா அபாரம்: சமனானது டெஸ்ட் தொடர் appeared first on Dinakaran.

Tags : Markram Saddamadittam ,South Africa Aadde ,India ,Abaram ,Samanaka Test Series ,Cape ,Town ,South Africa ,Cape Town ,Aavi ,Markram Sadamaditum Dhuna ,Adade ,Samananya Test Series ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...